புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக சிவில் சர்வீஸ் அகாடமி: அமைச்சர் அறிவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், இளையோரின் திறனை மேம்படுத்த சிவில் சர்வீஸ் அகாடமி தொடங்கப்படும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறினார். தீபாவளி, பொங்கலுக்கு ஆதிதிராவிட நலத்துறையால் பணத்துக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தரமான பருத்தி சேலை, கதர் வேட்டி, சட்டை துணி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் இன்று பேசியது: "ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் சதவீதத்துக்கு குறையாமல் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது விதி. இம்மக்கள் 18 சதவீதமாக இருந்தாலும் 21 சதவீதமாக ரூ.488 கோடியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 100 சதவீதம் முழுமையாக அந்த மக்களுக்காக செலவழிக்கப்படும். விடுதிகளை சீரமைத்து படிக்கும் அறைகள், கல்வி உபகரணங்கள் வாங்கப்படும். புதிய படுக்கைகள் வாங்கப்படும். பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான சிறப்பு மத்திய உதவி (SCSP) நிதி ஆதாரங்களை நெறிமுறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும். எஸ்சி, எஸ்டி குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இளையோரின் திறனை மேம்படுத்த சிவில் சர்வீஸ் அகாடமி தொடங்கப்படும். இதன்மூலம் அரசு மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு தயாராவோர் சிறப்பான முறையில் தயாராவார்கள். வீடு கட்டும் திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றோருக்கு மீண்டும் வீடு கட்ட மானிய நிதி தர சிறப்பு குழு அமைக்கப்படும்.

வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விரைவில் இலவச மனைப்பட்டா தரப்படும். தீபாவளி, பொங்கலுக்கு ஆதிதிராவிட நலத்துறையால் இனி பணத்துக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தரமான பருத்தி சேலை, கதர் வேட்டி, சட்டை துணி தரப்படும். தீயணைப்புத் துறையில் இந்த ஆண்டு ஐந்து சிறிய தீயணைப்பு வாகனங்கள், 3 வாட்டர் பவுசர் வாகனங்கள் ரூ.4 கோடியில் வாங்கப்படும்.

இந்த ஆண்டு 4 உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரிகள் பதவி நிரப்பப்படும். இந்த ஆண்டு தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பதவிகளில் 3 ஆண்களும், 2 பெண்களும் என ஐவரும், 12 தீயணைப்பு வாகன ஓட்டுநர்கள், 39 ஆண், 19 பெண் தீயணைப்பு வீரர்கள் பதவிகளும் நிரப்பப்படும். இந்த ஆண்டு கோரிமேட்டில் கோட்ட தீயணைப்பு அதிகாரி தலைமை அலுவலகம் கட்டப்படும். தவளக்குப்பம், கரையாம்புத்தூர், லிங்காரெட்டிபாளையம்.

திருப்பட்டினத்தில் தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான பணியிடங்கள் உருவாக்கப்படும். தீயணைப்புப் பணிக்காக புதிய ரக ட்ரோன்கள் அனைத்து பிராந்தியங்களுக்கும் வாங்கப்படும். இந்த ஆண்டு 54 மீட்டர் உயரம் கொண்ட நவீன ரக வான் ஏணி தள வாகனம் வாங்கப்படும். புதுச்சேரி மாநில சிறுபான்மை ஆணையம் வெகு விரைவில் அமைக்கப்படும்" என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE