“இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக மின்னும் தமிழகம்” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By கி.கணேஷ்

சென்னை: “இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2024-ல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்பதுடன், தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயித்துள்ளது.

நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம்!.

நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தாய்ப்பான திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர்கல்வியில் மென்மேலும் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில், தமிழக உயர்கல்வி நிறுவனங்களே முன்னணி இடங்களைப் பிடித்திருந்தன. முதல் 100 பல்கலைக் கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள், முதல் 100 கலைக் கல்லூரிகளில் 37, முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் 14, முதல் 50 மாநிலப் பல்கலைக் கழகங்களில் 10 என தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்திருந்தன.

சென்னை ஐஐடி நாட்டின் ஒட்டுமொத்தப் பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. பல் மருத்துவப் பிரிவில் சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்தையும் பிடித்துள்ளன. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த மாநில பொது பல்கலைக்கழகமாக தேர்வாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE