‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை’ - ஆர்டிஐ தகவல்; சமூக ஆர்வலர் கேள்வி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தெரிய வந்துள்ள நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிலவும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து நகரின் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் வருகை மற்றும் படுக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார்போல் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள்படி செவிலியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். அதனால், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல்களை பெற்ற மதுரை கே.கே.நகர் சுகாதார செயற்பாட்டாளர் யு.வெரோணிக்கா மேரி நம்மிடம் பேசுகையில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4,300-க்கும் அதிமான எண்ணிக்கையில் படுக்கைகள் உள்ளன. மதுரை கோரிப்பாளையம் அருகில் அமைந்துள்ள பிரதான கட்டிடத்தில் பிரசவ வார்டில் மட்டும் 672 படுக்கைகள் உள்ளன. இதே வளாகத்தில் குழந்தைகள் நலப்பிரிவு, புற்றுநோய் பிரிவு, நுரையீரல் பிரிவு, இருதய நோய் பிரிவு என்று முக்கிய மருத்துவ பிரிவுகளுக்கான உள் நோயாளிகள் பிரிவு செயல்படுகின்றன.

இதோடு சேர்த்து ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் கடனுதவியுடன் கட்டப்பட்ட 6 மாடிகள் கொண்ட 23 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்ட பிரத்யேக ‘டவர் ப்ளாக்’ கட்டிடமும் செயல்படுகிறது. அண்ணா பேருந்து நிலையம் அருகில் விபத்து காயம் சிகிச்சை பிரிவு மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடமும் செயல்படுகிறது. இதில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளும் அடங்கும்.

இவையனைத்துக்கும் சேர்த்து செவிலியர் பணியாளர்கள் 561 பேர் பணிபுரிகின்றனர். ஆண் மற்றும் பெண் உதவி செவிலியர்கள் சேர்த்து மொத்தம் 200 பணியாற்ற வேண்டிய நிலையில் வெறும் 48 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். மீதம் 152 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக அரசு மருத்துவமனையில் 1,177 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் வெறும் 569 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மீதம் 608 செவிலியர்கள் பணியமர்த்தப்படவேண்டிய நிலை உள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவுகளில் இரண்டு படுக்கைக்கு ஒரு எண்ணிக்கையிலான செவிலியர் பணியில் இருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் சொல்கிறது. ஆனால், இது எதுவும் இங்கு கடைப்பிடிக்கப்படாத நிலையில் செவிலியர்கள் நியமனம் உள்ளன. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள்படி செவிலியர்கள் எண்ணிக்கையை நியமித்து ஏழை, எளிய நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE