கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா: பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் கடந்த ஜூன் 4-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் ஆக. 17-ம் தேதி சென்னைகலைவாணர் அரங்கில், தமிழகஅரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள்தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, ஐயுஎம்எல், மமக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் தலைவர்களுக்கு திமுகசார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பாஜகமாநில தலைவர் அண்ணாமலைக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, ரஜினி, கமல்உள்ளிட்ட திரை பிரபலங்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE