என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை. தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், பல்கலைக்கழகம், பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட 16 பாடப்பிரிவுகள் அளவிலும் மத்திய கல்விஅமைச்சகம் வெளியிட்டு வருகிறது.கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலை டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு அக்கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். தரவரிசையில், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) 2-ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3-ம் இடத்தையும், டெல்லி ஐஐடி 4-ம் இடைத்தையும் பிடித்துள்ளன.

கடந்த 2018-ல் தரவரிசையில் 2-ம் இடத்தை பிடித்த சென்னை ஐஐடி அதைத்தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல பொறியியல் பிரிவிலும் முதலிடத்தை பிடித்த சென்னை ஐஐடி, ஆராய்ச்சிகள் மற்றும் புதுமைகள் பிரிவுகளில் 2-வது இடம் பெற்றுள்ளது. திருச்சி என்ஐடிபொறியியல் பிரிவில் 9-ம் இடத்தை பிடித்தது.

மாநில பல்கலைக்கழகங்களுக்கான பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்து சாதனைபடைத்துள்ளது. இப்பிரிவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 8-வது இடத்தை பிடித்தது. மருத்துவப் பிரிவில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம் முதலிடத்தையும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. பல் மருத்துவப் பிரிவில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்விநிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்தது.

சட்டப்பிரிவில் பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரி, கல்லூரிகள் பிரிவில் டெல்லி இந்துகல்லூரி ஆகியவை முதலிடைத்தை பிடித்தன. புகழ்பெற்ற கல்லூரியாகக் கருதப்படும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி 3-வதுஇடத்தில் உள்ளது. மேலும், மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் பிரிவில் பெங்களூரு ஐஐஎம் கல்லூரியும், கட்டிடக்கலை பிரிவில் ரூர்க்கி ஐஐடியும், ஆராய்ச்சிகள் பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ்சியும், புதுமை பிரிவில் மும்பை ஐஐடியும், வேளாண்மை பிரிவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமும், மருந்தியல் பிரிவில் டெல்லி ஜாமியா கல்லூரியும் முதலிடம் பெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE