“தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக” - ஆர்.பி.உதயகுமார்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “ஜெயலலிதாவை தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஒடைப்பட்டியில் இன்று (ஆக.12) நடைபெற்றது. உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித் ஷாவாக இருக்கட்டும். ஆனால் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்த்த 2 கோடி தொண்டர்களுக்கும் பழனிசாமி அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.

அண்ணாமலை அசைன்மென்ட் என்னவாகும் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆனால், அதிமுக தொண்டர்கள் இதயத்தில் சுமந்து கொண்டுள்ள அசைன்மென்ட் உறுதியாக அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும். புதிதாக கட்சியை தொடங்கும் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வார்கள். அதைப்பற்றி அதிமுகவுக்கு கவலையில்லை. பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சிக் கூட்டத்தில் அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். அண்ணாமலையின் பேச்சுகள், உண்மையான அதிமுக தொண்டனின் நெஞ்சில் முள் பாய்ந்ததை போல் உள்ளது. அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் கள்ளச் சாராயத்தால் 69 இறந்துள்ளனர். அதைப்பற்றி அண்ணாமலை தொடர்ந்து பேச மறுக்கிறார்.

அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். அவர் ஜெயலலிதாவை பற்றி தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். முதல்வர் ஸ்டாலின், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE