புதுச்சேரியில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 மழைக்கால நிவாரணம்!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என புதுவை சட்டப்பேரவையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் கூறியது: "இந்திய உணவு கழகத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான குறைந்தபட்ச தரத்தை மேம்படுத்த ஆகும் கூடுதல் செலவை ஈடு செய்யும் வகையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் மானியமாக வழங்கப்படும்.

நாட்டிலேயே முதன்முறையாக புதுவையில் பரிசோதனை அடிப்படையில் 100 விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார்கள் வழங்கப்படவுள்ளன. சூரிய மின்சக்தி மின்மோட்டார் அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 70 சதவீதமும் மானியம் வழங்கும். மேலும், புதுவையில் 500 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் அமைக்கவும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

என் வீடு என் நிலம் திட்டம் என்ற திட்டத்தில் நகரில் மாடி தோட்டம் அமைக்க ரூ.5 ஆயிரமும், அரசுப் பள்ளிகளில் 4,000 சதுர அடியில் காய்கறித் தோட்டம் அமைத்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் வழங்கப்பட்டு வரும் மானியம் பெற தற்போதுள்ள நில உச்சவரம்பு, பொது விவசாயிகளுக்கு ஒன்றரை ஏக்கரில் இருந்து ஒரு ஏக்கராகவும், அட்டவணை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் இருந்து அரை ஏக்கராகவும் குறைக்கப்படும்.

ஐஎஸ்ஐ தரமுள்ள பிவிசி நிலத்தடி நீர்பாசன குழாய்கள் அமைக்க வழங்கப்பட்டு வரும் ஹெக்டருக்கு அதிகபட்ச மானியத் தொகையான ரூ.30 ஆயிரம் நடப்பாண்டு முதல் ரூ.45 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பருத்தி பயிரிடுவோருக்கு கிலோவுக்கு ரூ.3 கூடுதலாக வழங்கி, பருத்தியை ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் கருவேல மரங்களை அகற்றி அந்த நிலங்களை சாகுபடிக்கு ஏற்றவாறு தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் ரூ.1,000 வழங்கப்படும். இந்த ஆண்டு நிவாரணத் தொகை நவம்பர் மாதம் வழங்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் மாநில அரசின் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் காலியாக உள்ள 23 வேளாண் அலுவலர், 5 வேளாண் அலுவலர் (பொறியியல்) 5 வேளாண் அலுவலர் (நீர நிலவியல்) பணியிடங்கள் நிரப்பப்படும்.

திருநங்கைகள் நலவாரியம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடையாள அட்டைகள் வழங்கி திருநங்கைகளுக்கு தொழில் கடன்கள், தொழிற்பயிற்சிகள் முதலானவை வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக ரூ.5 கோடி செலவில் பழுதடைந்த நிலையில் உள்ள 100 அங்கன்வாடி மையங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

39 சிதிலமடைந்துள்ள அங்கன்வாடிகள் புதுப்பிக்கப்படும். 69 அங்கன்வாடி மையங்களை திறன்பட்ட அங்கன்வாடி மையங்களாக மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி கோரப்படும். அங்கன்வாடி மையங்களில் Early Childhood Care and Education (ECCE) கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கற்பித்தல் மற்கொள்வதற்கு விளையாட்டு மற்றும் அடிப்படைக் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும்.

அனைத்து அங்கன்வடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடியில் உள்ள காலிப் பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும். பயணம் மேற்கொள்ளும் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் அருகில் இலவச பெண் பயணியர் விடுதி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் 416 குழந்தைகள் ஒரு பெற்றோரை இழந்துள்ளனர்.

அவர்களில் அரசுப் பள்ளியில் பயிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மத்திய அரசு திட்டமான ஏற்பாதரவு திட்டம் மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்க மததிய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் ஈமச் சடங்குக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையான ரூ.15 ஆயிரம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ரூ.2.5 கோடி மதிப்பில் 1,000 கறவை பதுக்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். கால்நடைகளுக்கு இல்லம் தேடிச் சென்று தீவனம் வழங்கப்படும். ரூ.26 லட்சம் மதிப்பில், காப்பீடு செய்யாத கறவைப் பசுக்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரு.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 33 கால்நடை மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்காக ரூ.1.8 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. கால்நடை இன அபிவிருத்தி கிளை நிலையங்கள் சிறு கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தி அங்கு ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவர். என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE