பி.எம்.டபிள்யூ தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட சிஐடியு கோரிக்கை

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஒரு வாரக் காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பி.எம்.டபிள்யூ தொழிலாளர் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரியத் தீர்வு காண வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் செயல்பட்டு வரும் பி.எம்.டபிள்யூ கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் 150 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், வேலைத்தளத்தில் வேலை நேரத்தைத் தன்னிச்சையாக நிர்வாகம் தீர்மானிப்பதைக் கைவிட வலியுறுத்தியும் பணிச் சுமையை நியாயமற்ற முறையில் திணிப்பதைக் கைவிடக் கோரியும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைத் தாமதமின்றி பேசி தீர்வு காண வலியுறுத்தியும் பி.எம்.டபுள்யூ தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக ஆலை வாயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பி.எம்.டபிள்யூ தொழிற்சாலை வாயில் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், பி.எம்.டபிள்யூ தொழிலாளர் சங்கத்தின் கௌரவ துணைத் தலைவர் நடராஜன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.சண்முகம் உள்ளிட்ட பலர் பேசினார். இதனைத் தொடர்ந்து நாளை தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பிஎம்டபிள்யூ தொழிலாளர்களின் கோரிக்கையைச் சுமுகமாகப் பேசி தீர்க்க அரசு முன்வர வேண்டும் என சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE