தேனி காமராஜர் பேருந்து நிலையத்தை சாலையாக மாற்றியதால் வாகன நெரிசல் அதிகரிப்பு: மக்கள் பரிதவிப்பு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனி காமராஜர் பேருந்து நிலையம் அனைத்து வாகனங்கள் கடந்து செல்லும் சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் நகரில் வாகன நெரிசல் அதிகரித்து இரைச்சலும், குழப்பமும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தேனி நேரு சிலை அருகே காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது. பேருந்துகளின் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும், கடந்த 2014-ம் ஆண்டு தேனி-பெரியகுளம் புறவழிச்சாலையில் பென்னிகுவிக் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது இங்கிருந்தே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

காமராஜர் பேருந்து நிலையத்தைப் பொறுத்தளவில் இப்பகுதியை கடந்து செல்லும் பேருந்துகள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இங்கு பேருந்து இயக்கத்துக்கான நேர நிர்ணயம் எதுவுமில்லை. இதனால் இப்பேருந்து நிலைய வளாகத்தின் வர்த்தகம், பாதித்து களையிழந்துவிட்டது.

இந்நிலையில், நகரத்துக்குள் நெரிலைக் குறைக்கும் வகையில் இன்று (ஆக.12) முதல் காமராஜர் பேருந்து நிலையம் அனைத்து வாகன பயன்பாட்டுக்குமான சாலையாக மாற்றப்பட்டது. இதனால் பேருந்துகள் மட்டுமல்லாது டூவீலர் முதல் அனைத்து வகையான கனரக வாகனங்களும் இப்பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து கடந்து செல்கின்றன. இதற்காக பெரியகுளம், மதுரை சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் இந்தப் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வாகனங்களும் பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போடி, தேவாரம் பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க நிற்கும் போது ஏராளமான வாகனங்கள் பின்னால் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நெரிசலும், இரைச்சலும் அதிகரித்துள்ளது. அதேபோல் போடி, கம்பம் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் மதுரை சாலையின் ஓரமாகவே பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன.

இதனால் இங்கும் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் திறந்தவெளியிலே பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியூர், உள்ளூர் வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள்தான் செல்ல வேண்டும் என்பதால் வாகன போக்குவரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நேரு சிலை அருகே பெரியகுளம், கம்பம், மதுரை சாலைகள் சந்திக்கின்றன. இப்பகுதி வாகன இயக்கங்களை முறைப்படுத்த இங்கு சிக்னல்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அனைத்து வாகனங்களும் பேருந்து நிலையத்துக்குள்ளே சென்றுவிடுவதால் இந்த சிக்னல் பயன்பாடு இல்லாமல் உள்ளது.

ஏற்கெனவே அரண்மனைப்புதூர் ரயில்வே கேட் மேம்பாலத்துக்கு அணுகுசாலை அமைப்பதற்காக கடந்த மாதம் 19-ம் தேதி முதல் இம்மாதம் 4-ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் குளறுபடி ஏற்பட்டு நகரில் நெரிசலும், பொதுமக்களுக்கு சிரமமும் ஏற்பட்டது. அதிலிருந்து மக்கள் ஒழுவழியாக மீண்ட நிலையில் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செய்யப்பட்ட இந்த மாற்றம் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமத்தையே ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், “மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் நெரிசலை குறைப்பதற்கான பரிட்சார்த்த முயற்சிதான் இது. இது தற்காலிகம் தான். விரைவில் மாற்றம் செய்யப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE