ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றம் செல்ல உள்ளதாக இந்து முன்னணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அந்த அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணியின் மாநில செயலாளர் மணலி மனோகர், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த மூன்று வாரங்களாக வங்கதேசம் பற்றி எரிகிறது. அங்கு வாழும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.

சுமார் 52 மாவட்டங்களில் இனவாத வன்முறை நடைபெற்றுள்ளது. இந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பொது இடங்களில் மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோக்களை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. இஸ்கான் கோவில் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் புனித நூல்களை எரிக்கப்பட்டுள்ளன. இந்திரா காந்தி கலாச்சார மையம், இந்திய அரசால் இலவசமாக தரப்பட்ட ஆம்புலன்ஸ் ஊர்திகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய நிலையில் வங்கதேச இந்துக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும், உலக நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணி 5 நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் மனு அளித்தது. ஆனால், நேற்று (ஞாயிறு) நள்ளிரவு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

வங்கதேசத்தில் நடைபெறும் இனப்படுகொலைகளாலும், திட்டமிட்ட வன்முறைகளாலும் அங்குள்ள இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து மதவெறி வன்முறையால் தனி நாடாக பிரிக்கப்பட்ட நாடு வங்கதேசம். பூர்வீக இந்தியர்களான அங்கு வாழும் இந்துக்கள் அடையும் துயரத்திற்கு ஆறுதல் கூறும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் தமிழகத்தில் "ஒப்பாரி" வைத்து அழக்கூட திமுக அரசு தடை விதித்துள்ளது. இதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

வங்கதேசத்தில் நடைபெறும் இனப்படுகொலை வன்முறையானது நாட்டை துண்டாட நடைபெற்ற முகமது அலி ஜின்னாவின் நேரடி நடவடிக்கைபோல் அப்பாவிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இத்தகைய அவலம் கண்முன் நடப்பதைப் பார்த்த பின்னரும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

எதற்கெடுத்தாலும் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் தமிழக முதல்வர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதாலா?

இனப்படுகொலைகளை கண்டித்தும் வங்கதேச அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருக்கிறது. ஆளும் திமுக அரசு தொடர்ந்து பாசிச போக்கைக் கடைப்படித்து, சர்வாதிகாரமாக ஜனநாயாகத்தின் குரல் வளையை நெறித்து வருகிறது.

பாலீஸ்தீன இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக அரசு அனுமதி அளிக்கிறது. அங்கு நடப்பது இரு நாடுகளுக்கிடையேயான போர். ஆனால், நமது அண்டை நாட்டில் நடத்தப்படும் வன்முறையை தடுக்க வலியுறுத்தக்கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம்?

சிறுபான்மையினரை தாஜா செய்வதாக நினைத்து பெரும்பான்மை தமிழர்களின் கருத்துரிமையை திமுக அரசு நசுக்குகிறது. தமிழகத்தில் ஆளும்கட்சியை விமர்சனம் செய்தால் குண்டர் சட்டம், சிறையில் அடைப்பது, பல குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இழுத்தடிப்பது என்ற ஆங்கிலேய அடக்குமுறையை திமுக கையாளுகிறது.

காங்கிரஸ் போராட்டம் என்ற பெயரில் தொடர்ந்து ஜனநாயக விரோதமாக, தான்தோன்றி தனமாக ஆர்ப்பாட்டம் நடத்தி, பொதுமக்களுக்கும் பொது போக்குவரத்திற்கும் இடையூறை செய்யும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்க வைக்கிறது திமுக அரசு.

முஸ்லிம் அமைப்புகள் / கட்சிகள் மதவாதமாக, தேசவிரோதமாக பேசுவதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் திமுக அரசின் தவறான செயல்பாட்டை பேசும் தனி நபர் மீது கடும் நடவடிக்கை பாய்கிறது. இத்தகைய செயல்பாடு ஜனநாயகத்தை கேலிகூத்தாகிறது. தேச விரோத செயலுக்கு திமுக துணைபோகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

மனிதாபிமானமில்லாமல் வன்முறை நடக்கும் வங்கதேசத்தில் கூட இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நடக்கும் காட்டாட்சி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ஜனநாயகத்திற்கு எதிராக, வங்கதேச இந்துக்கள் பாதுகாப்பை வலியுறுத்த ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி பேரியக்கத்துக்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுத்து உள்ளது.

ஜனநாயகத்தை மதிக்காத திமுக ஆட்சியின் அவலத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறது இந்து முன்னணி. திமுகவின் ஜனநாயக விரோத செயலை புரிந்துகொண்டு, ஜனநாயக வழியில் போராட இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டும் என்று நம்புகிறோம்.

மதவெறி வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரை மானத்தை பாதுகாத்துக் கொள்ள எல்லை தாண்டி வரும் நமது பூர்விக உறவான இந்துகளை மத்திய அரசு அன்பாக, இரு கைகளால் அரவணைக்க வேண்டும். மேலும் தற்காலிக /அவசர தீர்வாக வங்கதேச இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்