தமிழகத்தில் 15-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: விழுப்புரத்தில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக விழுப்புரத்தில் 22 செ.மீ., திருவண்ணாமலையில் 17 செ.மீ., செஞ்சியில் 14 செ.மீ., திண்டிவனத்தில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13-ம் தேதி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 14-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், 15-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 15-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE