சென்னை: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்குகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 78- வது சுதந்திர தினம் வரும் ஆக.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தலைநகர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். முன்னதாக, அவர் காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின், தேசியக்கொடியை ஏற்றுகிறார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய பின், விருதுகளை வழங்குகிறார்.
முன்னதாக இந்த விருதுகளை பெற தகுதியுடையவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன்பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த துறைவாரியாக விருதாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் உட்பட பல விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், சான்றிதழும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக அரசின் சார்பில் கடந்த 2021 முதல் வழங்கப்படும், தகைசால் தமிழர் விருதை இந்தாண்டு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
தொடர்ந்து, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, சிறப்பாக செயல்படும் 3 அரசுத் துறைகளுக்கு முதல்வரின் நல்லாட்சி விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம், சமூக சேவகர், கூட்டுறவு வங்கிக்கான விருதுகள், சமூக நலன் மற்றும் மகத்தான சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளையும் வழங்குகிறார். மேலும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்குகிறார்,
முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததும், அனைத்து மாவட்டங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படும்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளம், தலைமைச்செயலக கட்டிடம் ஆகியவை வண்ணம் பூசப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளத்தின் எதிரில், 3 பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை விழா நடைபெறும் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் சென்னையில் 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல், எழும்பூர் உட்பட சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து ரயில் மற்றும் விமான நிலையங்களும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழா நடைபெறும் ஆகஸ்ட் 15-ம் தேதி விழா நடைபெறும் இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி சுதந்திர தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி தலைமைச் செயலகம் எதிரே நடைபெற உள்ளது. அன்றைய தினம் அப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago