திருத்தணி அருகே கன்டெய்னர் லாரி - கார் மோதி விபத்து: தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருத்தணி அருகே லாரி மீது கார் மோதியதில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த சேர்த்தன் (20), யுகேஷ் (20), நித்திஷ் (20), நித்திஷ்வர்மா (20), ராம்கோமன் (20), சைதன்யா (20) மற்றும் விஷ்ணு (20) ஆகிய 7 பேர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றனர். பிறகு, அவர்கள் நேற்று மாலை காரில் கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் நேற்று மாலை 6.45 மணியளவில், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ராமஞ்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

2 பேர் படுகாயம்: அதேநேரத்தில் எதிர்திசையில், சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் பயணித்த கார், எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல நசுங்கியது. இதில் உள்ளே இருந்த சேர்த்தன், யுகேஷ், நித்திஷ், நித்திஷ்வர்மா, ராம்கோமன் ஆகிய 5 மாணவர்கள் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் எஸ்.பி. சீனிவாசப் பெருமாள் தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கனகம்மாசத்திரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, படுகாயமடைந்த சைதன்யா, விஷ்ணு ஆகிய இருவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்னர் 5 பேரின் உடல்களை பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து, கனகம்மாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE