மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ.50 கோடியில் தமிழர் கலை, பாரம்பரியக் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கும் முதல்கட்டப் பணி ரூ.15 கோடியில் தொடங்கி உள்ளது.
1981-ல் 5-வது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திட்டம் 33 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
ரூ.25 கோடியில் கட்டிடம்
2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலகத் தமிழ்ச் சங்கத்துக்கென ரூ.100 கோடியை ஒதுக்கினார். அதில் ரூ.25 கோடியில் உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு என பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்படும் என அறிவித்தார்.
இதன்படி மதுரை அரசு சட்டக்கல்லூரி அருகே 14.15 ஏக்கரில் அமைந்த இச்சங்க கட்டிடம் 2016-ல் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. சுமார் 1 லட்சம் சதுரடியை கொண்ட இக்கட்டிடம் பல்வேறு வசதிகளைக் கொண்டு செயல்படுகிறது.
இச்சங்கக் கட்டிடத்துக்குள் நுழைந்தாலே தமிழர் கலை, வாழ்கையைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் அருங்காட்சியகம் அமைக்க, அதன் இயக்குநர் கா.மு.சேகர் நடவடிக்கை எடுத்தார்.
முதல் கட்டமாக ரூ.15 கோடியில் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பணிகள் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (பூம்புகார்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபு ஆலோசனையின்பேரில், அத்துறையைச் சேர்ந்த குழுவினர் நேற்று ஐந்திணைப் பூங்கா, அருங்காட்சியகம் அமையவிருக்கும் இடங்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் கூறியதாவது: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ.50 கோடியில் அமையவிருக்கும் அருங்காட்சியகம் இன்னும் 2 ஆண்டில் தமிழரின் வாழ்வியலை எடுத்துரைக்கும் காட்சியகமாக மாறும். நமது நாகரிகம், கலை, இலக்கியம், போர்முறைகள், பண்பாடு, விளையாட்டு உட்பட பல்வேறு தகவல்களை அறியும் இடம், சிந்தனையைத் தூண்டும் மையமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. எழுத்து வடிவில் படிப்பதைவிட ஒன்றை காட்சிப்படுத்தும்போது எளிதில் அது மனதில் பதியும்.
ஐந்திணைப் பூங்கா
உலக தமிழ்ச் சங்கத்தின் நுழைவுவாயிலை பார்த்தாலே அனைவரையும் கவரும் வகையில், நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டுக் காளை உள்ளிட்ட கலைப் பொருட்களால் அழகுப்படுத்தப்படும். அருங்காட்சியகத்தில் ஓவியம், கல், மர சிற்பங்கள், புடைப்பு சிற்பம், சுடுமண் சிற்பம், போர் கருவிகள், அறிவியல், விவசாயம், மருத்துவம், மெய் நிகர் காட்சிகள், பழந்தமிழ் வாழ்வியல் பொருட்கள் சேகரிப்பு உட்பட 328 கலைப் பொருட்களை இடம்பெறச் செய்ய உள்ளோம். இதற்காக 80-க்கும் மேற்பட்ட மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களின் தன்மையை விளக்கும் வகையில், அழகிய ஐந்திணைப் பூங்கா ஒன்று அமைகிறது. ஐந்து நிலங்களின் தன்மை, செயல்பாடு எப்படி இருக்கும். இந்த நிலங்களில் வாழும் உயிரினங்களை அருகில் சென்று பார்க்கவும், இயற்கையை இசை நயத்துடன் ரசிக்கவும் 12டி கோணத்தில் பார்க்க, பிரம்மாண்ட தியேட்டர் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
தமிழ்த்தாய் சிலை
உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை சுற்றிலும் தத்ரூபமாக பல்வேறு சிற்பங்கள் நிறுவப்படும். இவ்வளாகத்தில் நுழைந்தாலே தமிழரின் வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிதியில் ரூ.16 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படுகிறது. இரண்டரை கோடியில் ஐந்திணை காட்சியகமும், பிற பணிகளும் நடக்கவுள்ளன. தற்போது முதல்கட்ட நிதி ரூ.15 கோடியில் பணியைத் தொடங்கி உள்ளோம். அடுத்தாண்டு ரூ.20 கோடியும், அடுத்து ரூ.15 கோடியும் தமிழக அரசு வழங்க உள்ளது. 3 ஆண்டுக்குள் அருங்காட்சியகப் பணி முடிந்து, கட்டடம் முழுவதுமே காட்சியகமாக மாறும். இதுதவிர, பிரம்மாண்ட நூலகம், போட்டித் தேர்வர்களுக்கான நூலகம், உலகளவில் நூலகங்கள் படிக்கும் வகையிலான மின் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு, மூன்றாண்டில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் அருங்காட்சியகமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago