யானை தந்தத்தை விற்க முயன்ற மூவர் கொடைக்கானல் அருகே கைது

By பி.டி.ரவிச்சந்திரன்


கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை செய்வதற்காக முயற்சிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த இரு தினங்களாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவினர், திண்டுக்கல் வனப்பாதுகாப்பு பிரிவினர் மன்னவனூர் வனச்சரக பணியாளர்கள் ஆகியோர் மன்னவனூர் பகுதியில் கண்காணித்துவந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மன்னவனூர் கைகாட்டி என்ற இடத்தில் வாகன சோதனை செய்ததில் வாகனத்தில் யானை தந்தம் கொண்டுசென்றதை கண்டுபிடித்தனர்.

இதில் யானை தந்தத்தை ஒரு வருடமாக வைத்திருந்த மன்னவனூர் அருகேயுள்ள கீழானவயல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், அவருடன் வந்த பட்டிவீரன்பட்டியை சேர்ந்த முருகேசன், பொன்வண்ணன் ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர். கேரளாவை சேர்ந்த நபருக்கு யானை தந்தத்தை விற்பனை செய்ய பட்டிவீரன்பட்டியை சேர்ந்த இருவர் கோடி கணக்கில் பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்து யானை தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவர்களுக்கு யானை தந்தம் எப்படி கிடைத்தது, தந்ததிற்காக யானை கொல்லப்பட்டதா, யானை தந்தத்தை விற்க முயற்சித்ததில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் வனத்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE