கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை வழங்க முதல்வருக்கு கோரிக்கை

By சி.கண்ணன்

சென்னை: கரோனா பேரிடரில் தொற்றால் பாதிக்கப்பட்டு சேவையாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு சுதந்திர தினத்தன்று அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பேரிடரை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. அந்த கடினமான தருணத்தில் அரசு மருத்துவமனைகள் தான் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தன.

தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்தனர். ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, 11 அரசு மருத்துவர்கள் உயிரிழந்தனர்.ஆனாலும், தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு எதையுமே செய்யவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.

குறிப்பாக உயிரிழந்த அரசு மருத்துவர்களில் ஒருவர் தான், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் விவேகானந்தன். தனக்கு நிவாரணமும், அரசு வேலையும் கேட்டு,விவேகானந்தனின் மனைவி திவ்யா குழந்தைகளுடன், அமைச்சரை மூன்று முறை நேரில் சந்தித்து வேண்டினார்.

கணவரை இழந்து தவிக்கும் தனக்கு அரசு வேலை வேண்டி, கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. மக்களின் உயிரை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவரின் குடும்பம் தொடர்ந்து கண்ணீர் சிந்துவதை நம் முதல்வர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புகிறோம். திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பிறகும் அரசு கருணை காட்டவில்லை.

பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற முனைப்போடு இந்த அரசு செயல்படுவதாக தமிழக முதல்வர் தெரிவிக்கிறார். எனவே வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை, தமிழக முதல்வர் தன் கரங்களால் வழங்கிட வேண்டுகிறோம். அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE