‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது’: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல பொருளாளர் மனோகர் தங்கராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாகத்தின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழுவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், திருமண்டல பேராயர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வருகிறார். ஆசிரியர் நியமனத்தில் பேராயர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என உத்தரவிட வேண்டும்." என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பேராயர் வழக்கறிஞர் வாதிடுகையில், "பள்ளி தாளாளரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. அவருக்கு மட்டுமே, ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பும் அதிகாரம் உள்ளது. மனுதாரர் உண்மையை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.

இந்த வழக்கில் நீதிபதி சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் 249 ஆரம்ப பள்ளிகள், 74 நடுநிலை பள்ளிகள், 3 உயர்நிலை பள்ளிகள், 11 மேல்நிலை பள்ளிகள், 2 கல்லூரி, 1 ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 2 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்வி நிறுவன ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் சம்பளத்துக்காக ஆண்டுதோறும் ரூ.600 கோடியை அரசிடம் இருந்து நெல்லை-தென்காசி திருமண்டல நிர்வாகம் பெறுகிறது. இது தவிர, யு.ஜி.சி.யும் நிதி உதவி அளிக்கிறது.

சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அரசு சில உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த உரிமைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது. மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர்வு நடைமுறைகளை ஏன் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. சிஎஸ்ஐ மறை மாவட்ட கல்வி நிறுவனங்கள் ஒன்றில் ஹேமா அல்லது ஹசீனா ஆகியோர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்களா?.

மாநில அரசின் நிதி உதவி பெறும் போது திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மறைமாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது மறைமாவட்ட கொள்கை என்றால் அதை நிச்சயமாக ஏற்க முடியாது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமனங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நடைபெற வேண்டும். ஜாதி, மதம் இல்லாமல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும். நேர்காணல் நடவடிக்கைகள் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, இங்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மேலும், அரசு கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்கும்பட்சத்தில், ​மதச்சார்பின்மை கோட்பாட்டின்படி தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

இந்த வழக்கில் மறைமாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த நியமன நடைமுறை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. எனவே அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதற்கான சட்டம் இயற்றுவதற்கான தருணம் வந்துள்ளது. மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்