புதுச்சேரி | கடலில் கலக்கும் மழைநீர் - அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மழைநீர் அதிகம் பொழிந்தும் தேக்க முடியாமல் கடலில் சங்கராபரணி ஆற்று நீர் செல்லும் சூழலில், செல்லிப்பட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த படுகை அணைக்கு பதிலாக புதிதாக கட்டாவிட்டால் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த மழையால், படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அணை பராமரிக்கப்படாததால், 2021-ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி, வீணாக கடலில் சென்று சேர்ந்தது. இந்நிலையில் இம்முறையும் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் கனமழை பெய்தது. புதுச்சேரியில் 30 கிமீ தொலைவு வரை சங்காரபரணியில் செல்லும் நீரை இந்த படுகை அணை இல்லாததால் தேக்க முடியாமல் கடலில் போய் சேர்ந்தது.

இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் செல்லிப்பட்டு படுகை அணை 2011ல் சிதிலம் அடைந்தது. எவ்வித முயற்சி எடுக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக நீரை சேமிக்க முடியவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலிலும் அறிவிக்கிறார்கள். எவ்வித முயற்சி எடுக்கவில்லை. இரண்டு முறை டெண்டர் கோரியும் நடக்கவில்லை. தற்போது 3வது முறை 20 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளனர். நீர் ஆதாரத்தை நம்பி 50 கிராமங்கள் உள்ளன. அரசு அலட்சியமாக செயல்படுகிறது.

அதிகாரிகள் எப்பணியும் செய்யவில்லை. விவசாயிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அரசு உடனடியாக தடுப்பணை கட்டவேண்டும். இதனால் 5000 ஏக்கர் பயன்பெற்று வந்தது. தற்போது பெய்த மழையால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கிறது. முப்போகம் விளையும் பூமி இது. இந்த சேமிப்பு நீரை நம்பிதான் விவசாயம் நடக்கிறது. தற்போது படுகை அணை உடைந்ததால் ஒருபோகமாக விவசாயம் மாறிவிட்டது.

குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு விட்டது. விவசாயிகள் மத்தியில் செல்லிப்பட்டு படுகை அணை கானல் நீராக உள்ளது. அணையை உடனடியாக கட்டி விவசாயிகளை பாதுகாக்கவேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளை ஒருங்கிணைந்து தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டி வரும்" என்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, "விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியை தொடங்கவுள்ளோம். பழைய விதிமுறைப்படி திட்டமதிப்பீடு செய்யப்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் பணியை எடுக்கவில்லை. இந்த விதியை திருத்த கோப்பு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் வந்தவுடன் டெண்டர் கோரப்பட்டு பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கிவிடும். துறை அமைச்சரும் பேரவையில் இதை உறுதிப்படுத்தினார்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE