கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை 2வது நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கிண்டி ஆளுநர் மாளிகை இரண்டாவது நுழைவாயில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நேற்று வந்திருந்தார். ஆளுநரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் கேனை வாங்கி வைத்துவிட்டு போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த மஞ்சுளா(41) என்பதும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரிய வந்தது.

அவர் கொண்டு வந்த மனுவை படித்து பார்த்தபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ் பியாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி, இன்ஸ்டாகிராம் மூலம் தன்னிடம் பேசி வந்ததாகவும், நேரில் சந்தித்துக் கொள்ளாமல் ஷேர் சேட் மூலம் மூன்று வருடங்களாக தன்னிடம் பழகியதாகவும் திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நான் இறந்தால் அவர்தான் காரணம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பெண்ணை சமாதானப்படுத்திய போலீஸார், மனுவை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்து விடுகிறோம் எனக் கூறி அந்த பெண்ணை கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிண்டி போலீஸார் தங்கள் வாகனத்தில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அழைத்துச் சென்று கடம்பத்தூர் போலீசார் உதவியுடன், அவரது உறவினர்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

மஞ்சுளா கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கவர்ச்சி திட்டங்களை நம்பி 5000 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக அப்போதைய திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தவரின் பெயரை, அடிக்கடி சொல்லி புலம்பி வருவதாகவும் தெரிய வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE