வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வயநாட்டில் 100 வீடுகள்: விக்கிரமராஜா தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வயநாடு பேரிடரில் வீடு இழந்த 100 பேருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேரமைப்பு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: "வயநாடு பேரிடர் காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்த ராஜூலு உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று (ஆக.9) சந்தித்தனர்.

அப்போது வயநாடு பேரிடரில் வீடுகளை இழந்த 100 பேருக்கு எங்களது பேரமைப்பு சார்பில் வீடுகள் கட்டித்தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு கேரள மாநில அரசு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வயநாடு பேரிடருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் வணிக சொந்தங்கள் பேரமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, பேரமைப்பின் பொது நலத் திட்டத்துக்கு துணை நிற்க வேண்டும் என்று பேரமைப்பு தலைவர் வி்க்கிரம ராஜா கேட்டுக் கொண்டார்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE