தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16-ம்தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதிகோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

13-ம் தேதி கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல்,சேலம், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

14-ம் தேதி கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 14-ம் தேதிவரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டெங்கு தடுப்பு நடவடிக்கை: இந்நிலையில் பரவலான மழைபொழிவை முன்னிட்டு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர்செல்வவிநாயகம் கூறியதாவது: பருவமழை காலத்தில் ஏற்படும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவக் கட்டமைப்பும், அனுபவமும் சுகாதாரத்துறைக்கு உள்ளது. தற்போதைய சூழலையும் கையாள தயார் நிலையில் இருக்கிறோம். மழை நீர் தேங்கிய இடங்களில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தொடர் கண்காணிப்பிலும், நோய்த் தடுப்புபணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல்பாதிப்புகள் குறித்த விவரங்களைசேகரித்து சுகாதாரத்துறை தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மழையால் நோய் பரவல் ஏற்படும் எனமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE