சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றவர்கள் ஊழல் கறை படியாமல் பணிபுரிய வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

By செய்திப்பிரிவு

கோவை: ‘சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றவர்கள் ஊழல் கறை படியாமல் பணியாற்ற வேண்டும்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், '2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணம்' என்ற தலைப்பில், சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றனர். நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மேம்பட வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி பெறும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகத் தேர்ச்சி பெற்றுள்ள நீங்கள் மிகவும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். நல்ல உடல் நலம், அறிவாற்றல், ஆன்மிகம் என 3 முக்கிய அம்சங்களை மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்.

உடல் நலத்தை பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும். அதில் யோகா செய்வதன் மூலம் உங்கள் உடல் நலம் மேம்படும். புத்தகம் படிப்பதை எப்போதும் நிறுத்தக்கூடாது. அதேபோல ஆன்மிகத்திலும் நாட்டம் செலுத்த வேண்டும். அதற்காக எந்நேரமும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது என்பதல்ல. ஒரு குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தையின் கல்வி மேம்பட உதவ வேண்டும்.

ஊழல் என்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சமாக உள்ளது. எனவே ஊழல் கறை படியாமல் பணியாற்ற வேண்டும். அதற்கென முன்கூட்டியே நிதி மேலாண்மையை பின்பற்ற வேண்டும். நீங்கள் பெறும் ஊதியத்தில், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைத் தேவைகளுக்கு உதவும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பக்க பலமாக அவர்கள் வாழ்க்கையிலும், பணியிலும் மேம்பட சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல வாழ்க்கைத் துணைஅமைவதன் மூலம் வாழ்க்கையிலும், பணியிலும் சாதிக்க முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஆர்வமாக உள்ள மாணவர்கள், தேர்வில் எப்படி வெற்றி பெறுவதுஎன யுக்தி வகுத்து அதன்படி திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கியமாக நேர மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். தேர்வுகளில் வெற்றிபெற உங்களின் ஒழுக்கம் முக்கியம். சிவில் சர்வீஸ் தேர்வில்வெற்றி பெற்றவர்கள் நேர்மையுடனும் பணியாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், புதுடெல்லி சங்கல்ப் பயிற்சி மையத்தின் தலைவர் சந்தோஷ் தனேஜா, சாம்பவி சம்கல்ப் கோவை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கார்த்திக், நிர்வாகிகள் அனுஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE