ராயப்பேட்டை எஸ்பிஐ வங்கியில் ‘எலி’யால் ஒலித்த பாதுகாப்பு அலாரம்

By துரை விஜயராஜ்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் எலியின் சேட்டை காரணமாக பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் எஸ்பிஐ வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து அண்ணாசாலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், வங்கியை சுற்றி சோதனை செய்தனர். அப்போது, வங்கியின் கதவு, ஜன்னல் எதவும் திறக்கப்படாமல் இருப்பதையும், ஆனால், உள்ளே அலாரம் ஒலிப்பதையும் கண்ட போலீஸார், உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தனர்.

பின்னர், வங்கியை திறந்து உள்ளே சென்ற போலீஸார், வங்கியினுள் மர்ம நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா?, பணம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் திருடு போயிருக்கிறதா? என்று சோதனை செய்தனர். ஆனால், வங்கியினுள் யாரும் இல்லை. இதையடுத்து போலீஸார், பாதுகாப்பு அலாரம் எப்படி ஒலித்தது? என்பது குறித்து ஆராய்ந்த போது, வங்கியினுள் சுற்றிக் கொண்டிருந்த எலியின் சேட்டை காரணமாக அலாரம் ஒலித்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இரவு நேரத்தில் வங்கியின் பாதுகாப்பு அலாரம் ஒலித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE