பெரம்பூரில் 4-வது ரயில் முனையம்: திமுக எம்பி கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “சென்னை புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு நான்காவதாக பெரம்பூரில் புதிதாக ஒரு ரயில் முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆய்வு நடந்து வருகிறது.” என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமுவின் கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு,சென்னையில் ரயில் சேவையை மேம்படுத்த ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சென்னையில் நான்காவது ரயில் முனையம் அமைக்கவும் திட்டமிருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: “இந்திய ரயில்வே துறையைப் பொறுத்தவரை சென்னை மிக முக்கியமான ஒரு மாநகரம். புதிய ரயில் பாதைகள் அமைப்பது, இரட்டை ரயில் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்களின் தரத்தை உயர்த்துவது, ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைப்பது, புதிய ரயில் பெட்டிகள் அறிமுகம் மற்றும் புதிய ரயில்கள் அறிமுகம் என சென்னையை மையமாக வைத்து தொடர்ச்சியாக பல திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய மூன்று ரயில் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு நான்காவதாக பெரம்பூரில் புதிதாக ஒரு ரயில் முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திலும், தமிழகம் வழியாகவும் 33,467 கோடி ரூபாய் செலவில் 2,587 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் பத்து புதிய ரயில் பாதைகள், மீட்டர் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் மூன்று திட்டங்கள், ஒன்பது இடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்கள் ஆகியவையும் அடங்கும். மொத்தம் திட்டமிடப்பட்ட 2,587 கி.மீ. திட்டத்தில் இதுவரை 7,153 கோடி ரூபாய் செலவில் 665 கி.மீ. நீளத்துக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன.

2009-14 ல் தமிழகத்துக்கு 879 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2024-25-ல் 6362 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பலமடங்கு நிதி ஒதுக்கீடு அதிகமாகியும் பல ரயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள்தான் காரணம். தமிழகத்தில் பல முக்கியமான திட்டங்களுக்கு 27,749 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 77 ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். காத்திருப்பு அறைகள், தொழில் சார்ந்த கூட்ட அரங்குகள், இலவச வைஃபை வசதி, சில்லறை விற்பனைக் கடைகள், ரயில் நிலையங்களின் மேற்பகுதியில் வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளூர் மக்களின் ரசனை மற்றும் பண்பாடு சார்ந்து அமைக்கப்படும்.

சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் எளிதான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த பத்தாண்டுகளில் 687 ரயில்வே லெவல் கிராசிங்குகளில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் மேலும் 239 இடங்களில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.புதிய ரயில்களை அறிமுகம் செய்வது என்பது ஒரு தொடர்ச்சியான பணி. பயணிகளின் எண்ணிக்கை, ரயில் நிலையங்களில் ரயில்கள் மற்றும் பயணிகளை கையாளும் இட வசதி ஆகியவற்றைப் பொறுத்து புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள 12 நடைமேடைகள் மூலம் தினசரி 158 ரயில்களும், எழும்ப்புரில் 11 நடைமேஎடைகள் மூலம் 108 ரயில்களும், தாம்பரத்தில் 9 நடைமேடைகள் மூலம் 93 ரயில்களும் இயக்கப்படுகின்றன,” என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமுவின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஆண்டுக்கு 56,716 ரயில் பெட்டிகள் தயாராகிறது. இவற்றில் 19,391 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை. மும்பையைத் தொடர்ந்து சென்னை புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்