தீர்வை உறுதி செய்யுங்கள்: 1913 புகார் சேவை மைய பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் சேவையில், புகார்களுக்கு மாநகராட்சியால் தீர்வு காணப்பட்டதை புகார்தாரரிடம் உறுதி செய்த பிறகே அந்த புகாரை முடிக்க வேண்டும் என்று அம்மையத்தின் பணியாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி சேவையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க 'நம்ம சென்னை' ஸ்மார்ட் கைபேசி செயலி, https://erp.chennaicorporation.gov.in/pgr/ என்ற இணையதளம் வழியாக புகார் தெரிவிக்கலாம். மேலும், 1913 என்ற தொலைபேசி புகார் சேவை வழியாகவும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த 3 புகார் சேவைகளில் 1913 தொலைபேசி எண்ணுக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன. தினமும் சராசரியாக 300 முதல் 500 புகார்கள் வருகின்றன. மழைக் காலங்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக 15 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.

சில நேரங்களில் இந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், புகார் தெரிவித்தாலும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும், புகாரை சரி செய்யாமலேயே அந்த புகாரை சரி செய்து விட்டதாக பதிவிட்டு முடித்து வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இம்மையத்தில் 1913 மூலம் புகார்களை பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 10-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு இன்று (ஆக.10) மாநகராட்சி சார்பில பயிற்சி வழங்கப்பட்டது.

அதில், புகார்தாரர்களிடம் கனிவாக பேச வேண்டும். அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது தீர்வு காணப்பட்டதை உறுதி செய்த பிறகே, அந்த புகாரை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE