நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் பெயர் எங்கே? - நவாஸ் கனி எம்.பி. கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினர் பெயர் இடம் பெறாததற்கு ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் வண்ணம் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்ட திருத்த மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினர் பெயர் இடம் பெறாதது கடும் கண்டனத்துக்குரியது.

மக்களவையில் மூன்று உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் இரண்டு உறுப்பினர்கள் என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்திய இஸ்லாமியர்களின் வரலாற்றோடும், சுதந்திரப் போராட்டம் முதல் இந்திய சுதந்திர வரலாற்றோடும் பின்னிப் பிணைந்த அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

சிறுபான்மை மக்கள் தொடர்பான அனைத்து சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடிவரும் தேசிய அளவிலான கட்சி. இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் தாய் சபை.

இப்படி இருக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்பான ஒரு சட்டதிருத்த மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டுக் குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது முறையற்றது.

எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்களையும் இணைத்து நாடாளுமன்ற கூட்டு குழுவை மீண்டும் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று நவாஸ் கனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE