மூணாறு மண் சரிவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு: மூணாறு அருகே ஏற்பட்ட மண்சரிவில் சாலையில் உருண்டு கிடந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த வாரம் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு எனும் இடத்தில் பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் சரிந்து மலைச்சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆகவே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போடி, தேனியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் பூப்பாறையில் இருந்து ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்ததால் பாறைகளை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் பாறைகளை அகற்றல் பணி நடைபெற்று வருகிறது. துளையிடும் கருவிகளால் ராட்சத பாறைகள் உடைக்கப்பட்டு சாலையோரம் குவிக்கப்பட்டன. மேலும் சாலையில் மேவிக் கிடந்த மண் குவியல்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தேவிகுளம் சார் ஆட்சியர் ஜெயகிருஷ்ணன் கூறுகையில், “மலைச்சாலையில் கிடந்த ராட்சத பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக பணி தாமதமாகி வருகிறது. முற்றிலும் பாறைகளை அகற்றிய பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE