தற்காலிக ஊழியர்கள் நீக்கம்: பெரியார் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அனுமதி

By கி.கணேஷ்

சென்னை: தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகந்நாதன், பதிவாளர் ஆர்.பாலகுருநாதன் மற்றும், பெரியார் பல்கலைக்கழகம் மீது குற்ற நடவடிக்கை தொடர சேலம் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுமதியளித்து தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் துறை செயலர் கொ.வீரராகவ ராவ் இன்று வெளியிட்ட அரசாணையின் விவரம்: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் 208 தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சங்கத்துக்கும் இடையில் தொழிற் தகராறு ஏற்பட்டது. இது தொழிற் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டு, வழக்கு பதியப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தொழிற்சங்க பொதுச்செயலாளர் சி.சக்திவேல், தலைவர் ஆர்.கனிவண்ணன், அமைப்புச் செயலாளர் பி.கிருஷ்ணவேணி மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 தொகுப்பூதிய பணியாளர்களை கடந்தாண்டு ஜனவரி 28-ம் தேதி பல்கலைக்கழக நிர்வாகம் நிரந்தர பணி நீக்கம் செய்தது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் மீது குற்றவியல் வழக்கு தொடர தொழிற்சங்க பொதுச்செயலாளர், சேலம் தொழிலாளர் உதவி ஆணையரிடம் அனுமதி கோரினார்.

இதுகுறித்து, இரு தரப்புடனும் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இதில், தொழிற் தகராறுகள் சட்டத்துக்கு முரணாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டுள்ளதாக உதவி ஆணையர் அறிக்கை அளித்துள்ளார். இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகிகள் மீது, தொழிற் தகராறுகள் சட்டப்படி வழக்குத் தொடர உதவி ஆணையர் அளித்த பரிந்துரையை முன்மொழிந்துள்ள தொழிலாளர் ஆணையர், குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்டத்துறை ஆலோசனை பெறலாம் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

இதற்கிடையில், இரு தரப்புக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், தொழிலாளர் துறை செயலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நிர்வாகத் தரப்பில் பதிவாளரும், தொழிலாளர் தரப்பில் செயலாளரும் பங்கேற்று தங்கள் பதிலுரைகளை வழங்கினர். வழங்கப்பட்ட ஆவணங்களின் ஆய்வுகளின் படி, 4 தொகுப்பூதிய பணியாளர்களையும் பணி நீக்கம் செய்த பின்னரே தொழில் தீர்ப்பாயத்துக்கு பணி நீக்கம் தொடர்பான ஒப்புதல் கோரும் இடை மனுக்களை தாமதமாக தாக்கல் செய்ததும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த பின்னரே ஒரு மாத ஊதியம் காலதாமதமாக வழங்கியதும் அறிய முடிகிறது.

இந்நிலையில், சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கருத்துரு, தொழிலாளர் ஆணையர் பரிந்துரை அடிப்படையிலும், கடந்த ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற விசாரணை முடிவின் அடிப்படையிலும், தொழிற் தகராறுகள் சட்ட நிபந்தனைகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகந்நாதன், பதிவாளர் (பொறுப்பு) ஆர்.பாலகுருநாதன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியோர் குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டு, அவர்கள் மீது உரிய நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர சேலம் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுமதியளிக்கப்படுகிறது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE