லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 357 மீன் கடைகளுக்கு ஆக.12 முதல் ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு வரும் ஆக.12 முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் சந்தையில் மொத்தம் உள்ள 360 கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு வரும் ஆக.12 முதல் தொடங்கும். அதற்கான பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீன் கடைகளுக்கான ஒதுக்கீட்டுப் பணிகளை தொடரவும், இறுதிப் பயனாளிகள் பட்டியலுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதேபோல சென்னை மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், அந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு அந்த வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் இருவாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE