கள்ளக்குறிச்சியில் விஎச்பி மாநிலக் கூட்டம் - நிபந்தனையுடன் அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநிலக் கூட்டத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலாளரான மீனாட்சி சுந்தரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநிலக் கூட்டத்தை நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அனைத்து கட்சிகளின் கூட்டங்களுக்கும் அங்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநிலக் கூட்டத்துக்கு மட்டும் போலீஸார் அனுமதி மறுப்பது என்பது சட்டவிரோதமானது. எனவே, அந்த இடத்தில் எங்கள் அமைப்பின் மாநிலக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், மிகவும் சிறிய அளவிலான அந்த மைதானத்தில் ஆயிரம் பேர் வரை கூடுவதற்கு அனுமதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெறும் மாநிலக் கூட்டத்தில் 400 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதே இடத்தில் அனுமதி வழங்க கள்ளக்குறிச்சி போலீஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE