விபத்து விழிப்புணர்வு: ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ போட்டி அறிவித்த சென்னை போக்குவரத்து போலீஸ்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: விபத்தில்லா நாளை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியை சென்னை போக்குவரத்து போலீஸார் நடத்த உள்ளனர். 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக ‘ஜீரோ இஸ் குட்’ என்ற பெயரில் நகர் முழுவதும் வித்தியாசமான முறையில் விளம்பரம் மேற்கொண்டுள்ளனர்.

விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளே இல்லாமல் அவற்றின் எண்ணிக்கை ஜீரோவாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்தே போக்குவரத்து போலீஸார் ‘ஜீரோ இஸ் குட்’ என விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையிலெடுத்தனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி விபத்தில்லா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 20 நாட்கள் தொடர் மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ போட்டியை சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் சாலைப் பயணத்தில் நடத்தை மாற்றங்கள் போன்ற கருப்பொருட்களை மையமாக வைத்து பொதுமக்கள் ரீல்ஸ்களை உருவாக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சமூக ஊடகங்களின் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி நடத்தப்படுகிறது. ரீல்ஸ்களை வரும் 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்பவர்கள் ‘விபத்தில்லா தினம்’ தொடர்பான எந்தவொரு தலைப்பிலும் 60 வினாடிகள் வரை ரீல்ஸை உருவாக்கலாம். உருவாக்கப்பட்ட ரீல்ஸ் பதிவினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்பட்ட கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி ZAD (விபத்தில்லா தினம்) ரீல் டெம்ப்ளேட்டுகளைப் பதிவிறக்கவும். உங்கள் ரீலில் டெம்ப்ளேட்டை இணைத்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் (@chennaitrafficpolice) அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிக்கவும். #zeroaccidentday, #ZAD, #safechennai, #GCTP மற்றும் #zeroisgood என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உங்கள் ரீல்ஸை இன்ஸ்டாகிராமில் பதிவிடவும்.

கடைசியாக, ரீல்ஸ் போட்டிக்கான கூகுள் படிவத்தை பூர்த்திசெய்து உங்கள் பதிவை முடிக்கவும்.போட்டியில் மூன்று விருதுப் பிரிவுகள் உள்ளன. சிறந்த செல்வாக்கு செலுத்துபவருக்கு ரூ.2 லட்சம் (அதிக பார்வைகளைக் கொண்ட வைரல் ஹிட் ரீல்), சிறந்த படைப்பாளிக்கு ரூ.1 லட்சம் (ZAD ஸ்பிரிட்டை மிகச்சரியாகப் படம்பிடிக்கும் சிறந்த ரீல்), சிறந்த வினையூக்கிக்கு (சமூகம்) ரூ.50 ஆயிரம் (அதிக லைக்குகளைப் பெற்ற இம்பாக்ட் ரீல்) வழங்கப்பட உள்ளது, என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE