“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குங்கள்” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு எம்.சி.சம்பத் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில் நசிவடைவதற்கு காரணம் திமுக அரசின் தொழிற்கொள்கை மற்றும் கடும் மின்கட்டண உயர்வு, தொழில் வரி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என்று எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாகப் பட்டியலிட்டிருந்தார். அதற்கு எந்த பதிலும் இதுவரை இல்லை. எனவே, காகிதத்தை மையினால் நிரப்புவதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில் வளத்தைப் பெருக்குங்கள்,” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்துறை அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பி. ராஜா, எங்கள் பொதுச் செயலாளர் ஜவுளி நிறுவனங்களின் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றது குறித்தும், திமுக அரசின் 38 மாத கால ஆட்சியில் தொழில் வளர்ச்சி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உட்பட உரிய ஆதாரத்துடன் எழுப்பிய பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமலும், திமுக ஆட்சியாளர்களுக்கே உரித்தான முறையில் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போல, சுற்றிச் சுற்றி நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளை மீண்டும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப் பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்றபோது 3,440 கோடி ரூபாய் முதலீட்டுக்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்பட்டுள்ள ஒருசில நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் செயல்படுவது தெரியுமா? தெரியாதா? ‘அதிமுக ஆட்சியான 2020-2021ல், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23ல் 27.70 சதவீதம் குறைவாக அந்நிய முதலீட்டை ஈர்த்து, 8-ஆவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளியதுதான் நிர்வாகத் திறனற்ற முதல்வரின் சாதனை’ என்பது தெரியுமா? தெரியாதா?

மத்தியப் பிரதேச முதல்வர் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு வருகை தந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது தங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தற்போதைய உங்களது ஆட்சியில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றது தெரியுமா? தெரியாதா?

திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில், நீங்கள் ஈர்த்த தொழில் முதலீடுகள், ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள், அதனால் வேலை வாய்ப்பைப் பெற்ற தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை, மாவட்டம் வாரியாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் என்று தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி “ஓலா” நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் “ஓலா” நிறுவனம் அமைத்து வருகிறது என்று கடந்த 2021 மார்ச் 9-ந் தேதியே ஓலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

ஆனால், அதற்குப் பின் விதிவசத்தால் அமைந்த திமுக அரசின் தொழில் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் இந்த இரு சக்கர வாகன தொழிற்சாலையைக் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயன்றபோது, உடனடியாக எடப்பாடி பழனிசாமியும், நானும், மற்ற அதிமுக நிர்வாகிகளும் உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தோம்.

தொழில்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் செமி கண்டக்டர் பற்றி குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளில் கார் போன்ற வாகனங்களுக்குத் தேவைப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியில் சீனா மற்றும் தைவான் போன்ற ஒருசில நாடுகள்தான் முன்னணியில் இருந்தன.

கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020-ம் ஆண்டு ஆரம்பத்தில், சீனாவில் செமி கண்டக்டர் உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்த சமயத்தில், இந்தியாவின் செமி கண்டக்டர் தேவையைப் பூர்த்தி செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆர்வம் காட்டியது. நாங்குநேரியிலும், ஓசூரிலும் செமி கண்டக்டர் பூங்காக்கள் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் ஈடுபட்டோம். ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த நீங்கள், எங்களது பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியதுபோல் இதற்கும் மூடுவிழா செய்தீர்கள்.

எனவே, செமி கண்டக்டர் தயாரிப்புக்கான அந்நிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றபிறகு, மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு 2024-ம் ஆண்டு மின்னணுக் கொள்கையை வெளியிட்டேன் என்று மார் தட்டிக்கொள்கிறீர்கள்.

மேலும், தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில் நசிவடைவதற்கு காரணம் திமுக அரசின் தொழிற்கொள்கை மற்றும் கடும் மின்கட்டண உயர்வு, தொழில் வரி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என்று எங்களது பொதுச் செயலாளர் தெளிவாகப் பட்டியலிட்டிருந்தார். அதற்கு எந்த பதிலும் இதுவரை இல்லை.

எனவே, காகிதத்தை மையினால் நிரப்புவதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில் வளத்தைப் பெருக்குங்கள் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்