புதுச்சேரியில் கள்ளச் சாராயம் இல்லை; தமிழக போலீஸின் பழி போடும் முயற்சி தோல்வி: பேரவைத் தலைவர் செல்வம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி சாராய பாக்கெட் பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார். “புதுச்சேரியில் கள்ளச் சாராயம் இல்லை. தமிழக போலீஸின் பழி போடும் முயற்சி தோல்வி” என்று பேரவைத் தலைவர் செல்வம் குறிப்பிட்டார்

புதுவை சட்டப்பேரவையில் இன்று (ஆக.9) கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:

கல்யாணசுந்தரம் (பாஜக): “பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ள பகுதிக்கு மத்தியில் மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது அரசுக்கு தெரியுமா? விதிமுறைக்கு உட்பட்டு மதுபான கடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அக்கடைகள் அகற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ரங்கசாமி: “புதுவையில் மதுபானக் கடைகள் அமைப்பதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் கலால் சட்டம், விதிகள் 1970ன் படி அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதியில் குறிப்பிட்டுள்ளபடி மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து கணக்கிடப்படும் தொலைவு அளவுகோலின்படி மதுபானக் கடைகள் அமைத்தல், இடமாற்றம் உள்ளிட்டவை செய்யப்படுகிறது. சுற்றுலா பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடைகளுக்கான அனுமதி இந்த விதிமுறையின் கீழ் வராது.

இதனால் சில சங்கடங்கள் இருக்கும். விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் புதுவையில் மது பாரே அமைக்க முடியாது. மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உறுப்பினர்கள் தயாராக உள்ளீர்களா? (இதையடுத்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.) அதற்கு தொடர்ந்து முதல்வர் பதிலளித்தார்.

முதல்வர் ரங்கசாமி; 1989ல் இறுதியாக மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு இதுவரை புதிதாக அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்கள் வருவாயை பெருக்க மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கினோம். புதுவையில் இயங்கி வரும் 545 மதுபான கடைகளின் உரிமம் பல தனியார்வசம் தான் உள்ளது. நமது மாநிலம் கலால்துறை வருவாயை நம்பித்தான் உள்ளது.

கடந்த ஆண்டு ரூ.1,488 கோடி கலால்துறை மூலம் வருவாய் கிடைத்துள்ளது. தற்போது இந்த வருவாயை ரூ.1,600 கோடியாக உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம். பெங்களூருவில் நள்ளிரவு ஒரு மணி வரை மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி படித்தேன். இதற்கு என்ன காரணம்? நாம் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். 1989ல் இருந்த மக்கள் தொகை என்ன? தற்போது புதுவையில் உள்ள மக்கள் தொகை எவ்வளவு?” என்றார்.

பிஆர்.சிவா (சுயே): “சாராயம் குடித்து அதிகளவில் இறந்து போகின்றனர். இதனால் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளனர். நீங்கள் கொடுக்கும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தை வைத்து வாழ முடியவில்லை” என்று கூறினார்.

முதல்வர் ரங்கசாமி: ”அப்படியானால் சாராயக்கடைகளை மூடிவிடலாமா? சாராயக் கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அரசு அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்துதான் எந்த நடவடிக்கையையும் எடுக்கும்” என்றார்.

பேரவைத்தலைவர் செல்வம்: ”சாராயக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்” என்றார்.

நேரு(சுயே): ”தமிழகத்தில் புதுவை கள்ளச்சாராயம் குடித்துத்தான் இறந்துவிட்டதாக புகார் தெரிவிக்கின்றனர். எல்லைப் பகுதியில் தமிழக போலீஸார் சோதனை நடத்துகின்றனர்” என்றார்.

முதல்வர் ரங்கசாமி: ”கள்ளச்சாராயம் என்றால் என்ன? புதுவையில் கள்ளச்சாராயம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

நேரு: ”புதுவையில் எரிசாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படுவதுதான் கள்ளச்சாராயம் என்கின்றனர். இதை குடிப்பதால் மரணம் ஏற்படுகிறது.” என்றார்.

அப்போது குறிக்கிட்ட பேரவைத் தலைவர் செல்வம்: ”தவறான தகவலை சபைக்கு தெரிவிக்கக்கூடாது” என்றார்.

அங்காளன் (பாஜக ஆதரவு சுயே): ”புதுவை சாராயம் குடித்த 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எரி சாராயத்தில் தண்ணீர் கலந்து விற்கின்றனர். கலிதீர்த்தாள் குப்பத்தில் தமிழக போலீஸ் சோதனையும் நடந்தது” என்றார்.

பேரவைத் தலைவர் செல்வம்: ”புதுவை மீது தமிழக போலீஸார் கள்ளச்சாராய விவகாரத்தில் பழியை துாக்கிப்போட முயன்றனர். அது தோல்வி அடைந்தது. நமது பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதில்லை” என்றார்.

முதல்வர் ரங்கசாமி: ”புதுவையில் அரசின் சாராய ஆலை மூலம் சாராயம் வழங்கப்படுகிறது. சாராயம் தொடர்பான புகார்கள் வருவதால் சாராய பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE