சென்னை - டெல்லி இடையிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் 48 - வது ஆண்டு கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையிலான ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்’ சேவை கடந்த 1976 ஆக. 7-ம் தேதி தொடங்கப்பட்டது. வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலாகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1988 ஜூனில் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது.

இந்த ரயில் சேவை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து வந்தது. தற்போது, இந்த ரயிலில் எல்எச்பி எனும் நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து டெல்லிக்கு 2,182 கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த ரயில் 10 நிலையங்களில் நின்று செல்லும். அதன் சராசரி பயண நேரம் 33 மணி நேரம். இது பயணிகளுக்கு வசதியான, நம்பகமான பயணத்தை அளித்து வருகிறது.

இந்நிலையில், இந்த ரயில் இயங்கத் தொடங்கியதன் 48-வது ஆண்டு தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது.

சென்னை கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ரயில் நிலைய இயக்குநர், அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள், ரயில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரயிலுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புதுடெல்லிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் ஆர்வலர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE