துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தூத்துக்குடி கூட்டத்தில் முடிவு

By ரெ.ஜாய்சன்


தூத்துக்குடி: நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுக தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி வஉசி துறைமுக விருந்தினர் மாளிகையில் எச்எம்எஸ், ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட துறைமுக தொழிற்சங்கங்கள் அடங்கிய தேசிய துறைமுக தொழிலாளர்களின் கூட்டமைப்பு கூட்டம் கடந்த 2 நாட்களாக (ஆக.7, 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆல் இண்டியா போர்ட் அன்ட் டாக் ஒர்க்கர்ஸ் ஃபெடரேசன் (எச்எம்எஸ்) தலைவர்கள் பி.எம்.முகமது ஹனீப், ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்கள் துறைமுகம் சத்யா, தாமஸ் செபாஸ்டின், தாமோதரன், சுரேஷ், சிஐடியு சார்பாக எஸ்.பாலகிருஷ்ணன், ரசல், காசி, ஏஐடியுசி சார்பில் சரவணன், சீனிவாசராவ், பிரகாஷ்ராவ், பாலசிங்கம், ராஜ்குமார், ஐஎன்டியுசி சார்பில் பி.கதிர்வேல், பலராமன், ரோமால்ட், கனகராஜ், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு, ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கு, சம்மேளனங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கண்டு கொள்ளாதது, போனஸ் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் அதை அமல்படுத்தாத நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு போன்றவற்றை கண்டித்து ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று மாலையில் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், “சம்பள உயர்வு மற்றும் இதர கோரிக்கைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 05.09.2021 அன்றே நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. 01.01.2022 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில் மூன்று ஆண்டுகளில் 7 முறை ஊதிய உயர்வு ஒப்பந்த கமிட்டி கூட்டம் நடைபெற்றும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கப்பல் துறை அமைச்சகம் இழுத்தடித்து வருகிறது.

மேலும், போனஸ் ஒப்பந்தம் 15.06.2023-ல் கையெழுத்தாகியும் இன்று வரை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோல தொடர்ந்து மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே, வேறுவழியின்றி கடைசி ஆயுதமாக ஆகஸ்ட் 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். இதனால் துறைமுகங்களில் பணிகள் முடங்கும். எனவே, மத்திய கப்பல் துறை அமைச்சகம் அதற்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE