திருப்போரூர் அருகே பள்ளி வகுப்பறை கான்கிரீட் மேற்பூச்சு இடிந்து 5 மாணவிகள் காயம்

By பெ.ஜேம்ஸ் குமார்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கான்கிரீட் மேற்பூச்சு இடிந்து விழுந்து ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். இதனால், பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்போரூரை அடுத்துள்ள சிறுதாவூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி இருந்து வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 202 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளி தொடங்கி மதியம் 12.30 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது. பின்னர் மீண்டும் 1.30 மணியளவில் மீண்டும் பள்ளி தொடங்கி நடைபெற்று வந்தது. 10-ம் வகுப்பு ஒன்றில் பாடம் நடத்தப்பட்டு கொண்டு இருந்தபோது பள்ளியின் கான்கிரீட் மேற்பூச்சு இடிந்து பெயர்ந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது விழுந்தது. இதனால் மாணவ, மாணவியர் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

சிமெண்ட் பூச்சு விழுந்ததில் 10-ம் வகுப்பு மாணவிகள் சுஜி (14), பிரதிக்‌ஷா (14), தமிழரசி (14) உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீலா காயமடைந்த மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு தலைமை மருத்துவர் மைதிலி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 3 மாணவிகளுக்கு தையல் போடப்பட்டது. மற்ற இரண்டு மாணவிகளுக்கு லேசான காயம் என்பதால் மருந்து போடப்பட்டது.

இதையடுத்து மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெற்றோர்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில பெற்றோர்கள் நீண்ட காலமாகவே இப்பள்ளியில் போதிய வசதி இல்லாமல் இதே நிலையில்தான் உள்ளது. எந்த அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் பூமகள் தேவி ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE