சென்னை மாநகராட்சியின் 1913 புகார் சேவையை மேம்படுத்த நடவடிக்கை: ஆணையர் ஜெ.குமரகுருபரன்

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் தொலைபேசி சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சேவையில் உள்ள குறைபாடுகளைப் பொதுமக்கள் தெரிவிக்க 'நம்ம சென்னை' ஸ்மார்ட் கைப்பேசி செயலி, https://erp.chennaicorporation.gov.in/pgr/ என்ற இணையதளம் வழியாகப் புகார் தெரிவிக்கலாம். மேலும் 1913 என்ற தொலைப்பேசி புகார் சேவை வழியாகவும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த 3 புகார் சேவைகளில் 1913 தொலைப்பேசி எண்ணுக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன. நாளொன்றுக்குச் சராசரியாக 300 முதல் 500 புகார்கள் வருகின்றன.

மழைக் காலங்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக 15 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. சில நேரங்களில் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், புகார் தெரிவித்தாலும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும், புகாரைச் சரி செய்யாமலேயே அந்த புகாரைச் சரி செய்து விட்டதாகப் பதிவிட்டு முடித்து வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த புகார் சேவையை மேம்படுத்த மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இம்மையத்தில் 1913 மூலம் புகார்களைப் பெறும் பணியில் 10 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்களின் எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவை அடிப்படையில் மேலும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை அனுபவம் மிக்க மாநகராட்சி தலைமையக அதிகாரிகள் மூலம் உறுதி செய்த பின்னரே அந்த புகார் முடித்து வைக்கப்படும். இந்த சேவை தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் கேட்டு, மேலும் இந்த சேவை மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE