காவிரியில் நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி; ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்ததைத் தொடர்ந்து, பரிசல் இயக்கத்துக்கு இன்று (8ம் தேதி) முதல் தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.

இந்நிலையில், மழைப் பொழிவு குறைந்ததைத் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது. எனவே, ஒகேனக்கல்லிலும் நேற்று மாலை விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிவடைந்தது. அதைத் தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிப்பது மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது தொடர்பாக நேற்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், காவிரி ஆற்றில் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு தொடர்பான தகவல்களை இக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் அளித்தனர். இந்நிலையில், 23 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் இன்று (வியாழக்கிழமை) அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் அருவிகளுக்குச் செல்லும் வழியில் உள்ள பாதுகாப்பு தடுப்புகள் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்து இருப்பதால் அவை சீரமைக்கப்படும் வரை அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை பென்னாகரம் எம்எல்ஏ-வான ஜி.கே.மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோர் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின்போது, பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் அற்புதம், கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், பாஜக மாநில மீனவரணி செயலாளர் மூர்த்தி, ஒகேனக்கல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரிசல் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு ஆற்றின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE