‘புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% அரசு இடஒதுக்கீடு’ - அரசை கண்டித்து திமுக, காங்., வெளிநடப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு பெறாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித்தலைவர் சிவா: புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் இடங்களை அரசுக்கு தர தேசிய மருத்துவ கவுன்சில் சொல்லியுள்ளது. கட்டாயமாக பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் இடம் தரவேண்டும். மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சில் சொல்லியும் இதை புதுச்சேரியில் பின்பற்றவில்லை. கல்லூரிகளில் பஞ்சாயத்து செய்யாமல் இதை மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் சட்டமாக்கலாம். மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 85 சதவீதம் கர்நாடகமும், 65 சதவீதம் இடங்களையும் தமிழகத்தில் தருகிறார்கள்.

பேரவைத்தலைவர் செல்வம்: மத்திய அரசு உத்தரவை தாருங்கள்.

சிவா: மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நம் பகுதியில் மத்திய அரசு கூட்டணி ஆட்சி நடக்கிறது. அத்துடன் மத்திய அமைச்சரே சொல்கிறார்.

சுயேட்சை எம்எல்ஏ நேரு: தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதுச்சேரியில் கொள்ளையடிக்கின்றன. அதிக பணம் வாங்குகிறார்கள் இதை தடுக்க வேண்டும்.

பேரவைத்தலைவர்: முதல்வர் வந்தவுடன் கேட்டு சொல்கிறேன்.

நாஜிம் (திமுக): அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பத்து சதவீதம் ஒதுக்கீடு சொல்லியுள்ளீர்கள். எத்தனை பேர் சென்றார்கள்.

பேரவைத்தலைவர்: முக்கிய விஷயம் இது. மத்திய அரசு ஆணை இருந்தால் தாருங்கள்.

சிவா: இந்த விஷயம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. தலைமைச்செயலர், சுகாதாரத்துறை செயலர் சொல்ல வேண்டும்.

பேரவைத்தலைவர்: செயலர்களை முதல்வர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி முதல்வர் உடன் கலந்து பேசி உடன் நடவடிக்கை எடுக்கிறோம்.

சிவா: தங்கள் கருத்தில் நம்பிக்கையில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

அதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பிறகு இதே காரணத்துக்காக ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE