கருணாநிதி நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி; நினைவிடத்தில் அஞ்சலி

By கி.கணேஷ்

சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்தவரும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி இதே நாளில் மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆக.7-ம் தேதி கருணாநிதியின் 6-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, இன்று (புதன்கிழமை) காலை அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புறப்பட்டது.

முன்னதாக, சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் , திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், அமைதிப் பேரணியாக சென்று, காலை 8,45 மணிக்கு அண்ணா சமாதியிலும், தொடர்ந்து கருணாநிதி சமாதியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE