ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயிலில் தேர்த் திருவிழாவை சாதி அடையாளமின்றி நடத்த ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை நடைபெறும் தேரோட்ட திருவிழாவை எவ்வித சாதி அடையாளம் இல்லாமல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சந்தனகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் கடைசி நாளான நாளை (ஆகஸ்ட் 7) தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சீர்பாதம், எம்புதடி போடுதல், குடூல் கட்டை போடுதல், பறையடித்தல் மற்றும் எண்ணெய் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சமூகம் சார்ந்த அரசியல் கட்சித் தலைவரின் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து கொண்டு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். மேலும், தலையில் குறிப்பிட்ட வண்ண ரிப்பன்களை கட்டிக்கொண்டும், சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் துண்டுகளை அணிந்து கொண்டும், சாதிய கொடிகளை கையில் பிடித்துக் கெண்டும், சாதி அரசியல் தலைவருக்கு சாதகமான கோஷங்களையும் எழுப்புகின்றனர்.

இந்த நிகழ்வுகள் எந்த வகையிலும் கோயில் திருவிழாவுடன் தொடர்புடையது அல்ல. இதனால் அமைதியாக நடைபெற வேண்டிய தேர் திருவிழாவில் தேவையற்ற பிரச்சினைகள் வருகின்றன. திருவிழாவில் பங்கேற்கும் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது.

இதுபோன்ற செயல்களை தடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடி உற்சவ திருவிழாவின் கடைசி நாளில் சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு, கொடிகள் பயன்படுத்தவும், குறிப்பிட்ட சமுதாயத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்த மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து ஒற்றுமையாக திருவிழாவை நடத்த வேண்டும். சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் டி-ஷர்ட்டுகள் அணிவது, கொடி பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எவ்வித சாதிய அடையாளமும் இல்லாமல் ஆண்டாள் கோயில் தேர் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE