“அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது” - தனபால் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்” என்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அருந்ததியர் சமுதாயத்தின் பாதுகாவலர் என்றுமே அதிமுகதான். வாழ்வின் அடித்தட்டிலும், அடித்தட்டிலிருந்த ஒரு சமுதாயத்தை நாட்டிலேயே முன்னோடியாகத் தனது புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி அருந்ததியர் சமூக மக்களை உயரச் செய்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்.

எம்.ஜி.ஆர்-ஐ அருந்ததியர் சமுதாய மக்கள், காவல் தெய்வமாக, மதுரை வீரனாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அருந்ததியச் சமுதாய மக்கள் அனைவருமே அதிமுகவுக்குத் தான் வாக்களித்தனர். அதிமுக என்றாலே அருந்ததியர் சமுதாய மக்களின் பாதுகாப்பு இயக்கம் என்ற நிலைதான் அன்றும் இருந்தது; இன்றும் தொடர்கிறது. அருந்ததியர் சமுதாய மக்கள் அதிமுக-வைக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.

'தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் குற்றம்' என்ற நிலையிலிருந்த தமிழ் நாட்டில், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தி மக்களிடையே சமநிலையை ஏற்படுத்தியது அதிமுக. இந்தியாவில் முதல் முறையாகக் கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி இரட்டைக் குவளை முறையை ஒழித்து பட்டியலின மக்களைத் தலைநிமிரச் செய்தது எம்.ஜி.ஆர் ஆட்சி.

சமுதாய மாற்றம் கல்வியால் மட்டுமே பெறமுடியும் என்பதால் சத்துணவுத் திட்டம், மாணவர்களுக்குக் காலணிகள், பல்பொடி, சீருடை உள்ளிட்டவற்றைத் தந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர். மதுரை வீரன் திரைப்படத்தில் அருந்ததியராகத் தன்னை வெளிக் காட்டி மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

1. ஆண்டான் அடிமை முறையை ஒழித்து, மக்களிடையே சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக மணியக்காரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அதிகாரிகள் நியமனம் என்ற முறையைக் கொண்டுவந்து கிராம நிர்வாக அலுவலர்களாக அருந்ததியர் சமுதாய மக்களை அமர வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.

2. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மக்காச்சோளம் குருணை கூட கிடைக்காத நிலையில், ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் கடைகளில் தரமான அரிசி, சர்க்கரை மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களைத் தந்து, மக்களின் பசிப் பிணியைப் போக்கியவர் எம்.ஜி.ஆர்.

3.அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதிகளையும், சாலை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

அதன் விளைவாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் சமுதாய மக்கள் மனதில் 1 சதவீத இடத்தைக் கூடப் பெறமுடியாமல் திமுக திணறியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம் வந்தது. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சமூக மறுமலர்ச்சி திட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, தமிழ் நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். ஏழை, எளிய மாணவர்களிடையே கல்வி கற்கும் திறனை மேம்படுத்தினார்.

விலையில்லா சைக்கிள்கள், மடிக் கணினி, கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் அனைத்திலும் ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்குப் பாடுபட்டார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் கடன் உதவி, தாட்கோ கடன் உதவி, வீட்டு மனைப் பட்டாக்கள், தாலிக்குத் தங்கம் என வறுமை ஒழிப்புத் திட்டங்கள் புதிய மைல்கல்லைத் தொட்டன.

அருந்ததியர் சமுதாய மக்களின் ஆதரவைப் பெற முடியாத திமுக "அருந்ததியர் சமுதாய மக்களை" இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு வகையிலும் தொடர்ந்து செயலாற்றியது. அருந்ததியர் சமுதாய மக்களின் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை பலமாக எழுந்தபோது, கண்துடைப்பு ஆணையத்தை ஏற்படுத்தி தமிழ் நாட்டில் வசிக்கின்ற அருந்ததியர் சமுதாய குழுக்கள் பலவற்றைக் கணக்கெடுப்பு செய்யாமல், ஒருதலைபட்சமாக அருந்ததியர் சமுதாய மக்கள் தொகையைக் குறைந்தபட்ச அளவில் கணக்குக்காட்டி 6 சதவீத இட ஒதுக்கீட்டிற்குப் பதிலாக வெறும் 3 சதவீத அளவில் உள் இட ஒதுக்கீடு என்று கூறி நாடகம் நடத்தப்பட்டது. அருந்ததியர் சமுதாய மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர்.

மீதம் இருக்கின்ற 90 சதவீதம் பேர் விவசாயக் கூலிகளாகவும், தோல் தொழிலாளர்களாகவும் பல்வேறு தொழில்களிலிருந்து வரும் நிலையில், தமிழ்நாடு மாகாணத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அருந்ததியர் சமுதாய மக்களின் மீது இருந்த வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக "கையாளும், தலையாலும் மலம் அள்ளும் சமுதாயம்" என்று பேசி, அது அரசு பதிவேடுகளிலும் பதிவாகி இன்றுவரை தீராத ஒரு அவலத்தை அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தகைய மோசமான மனநிலையை ஏற்படுத்தியதுதான் திமுக-வின் சாதனை.

18 சதவீதத்தில் நியாயமாக 6 சதவீத இட ஒதுக்கீடு வரவேண்டிய நிலையில், பெயரளவிற்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை செய்துவிட்டு, தன் ஜால்ராக்களை விட்டு துதிபாடு செய்ததுதான் திமுக-வின் பணியாகும். திமுக-வின் ஆதரவு வட்டத்தில் இருக்கின்ற சிலர், தங்களின் ஆதரவாளர்கள் மூலமாக அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், யாரும் அறியாதது கிடையாது. அதிமுக 2011-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்திலிருந்து மேற்படி 3 சதவீத இட உள் ஒதுக்கீட்டு வழக்கை அரசு தரப்பாக இருந்து அருந்ததியர் சமுதாய மக்களின் நியாயங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைத்து திறம்பட வழக்கை நடத்தியது.

2020-ஆம் ஆண்டு, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தபோது, மேற்படி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடைக்காலத் தீர்ப்பையும் பெற்றது அதிமுக அரசுதான். 10 ஆண்டு காலம் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஆதரவாக அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டின் வழக்கை திறம்பட நடத்தி, தற்போது கிடைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது அதிமுக அரசுதான்.

அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த என்னை, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் அமர வைத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர்கள் சினிமாவில் சொல்வதை நிஜமாக்கிக் காட்டியது அதிமுக. அனைத்துக் கட்சிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களை பிரித்துக்காட்ட (எஸ்சி ) SC அணி என பிரித்து வைத்துள்ளனர்.

அனைத்துக் கட்சிகளிலும் எஸ்சி அணி தனித் தனியாக இருக்கிறது. திமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் எஸ்சி அணிகளை வைத்திருக்கின்றன. ஆனால், அஇஅதிமுக "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கையை கொண்ட கட்சி அதனால் இங்கு எஸ்சி அணி என்று தனி அணி இல்லை. பட்டியலின மக்களை உயர்ந்த பொறுப்புகளில் நியமித்து கௌரவிக்கப்படுகின்றனர்.

சமூக நீதிக் கட்சி என்று பிதற்றிக்கொள்கின்ற திமுக பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த ஆ. ராசாவை அருந்ததியர் மக்கள் அதிகமாக வாழ்கின்ற நீலகிரியில் ஏன் நிற்க வைத்தது. ஒரு பொது தொகுதியில் நிற்க வைக்க ஏன் மனம் இல்லை? தைரியம் இல்லை? எங்கள் இயக்கம் திருச்சியில் தலித் எழில்மலையை ஒரு பொது தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்து சமூக நீதியை நிலைநாட்டிய இயக்கம் அஇஅதிமுக.

இன்று நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டின் பலனாக நூற்றுக்கணக்கான அருந்ததியர்கள் மருத்துவர்களாக ஆகியுள்ளனர். என்றும், அதிமுக-வின் நிலைப்பாடு சமூக நீதி காப்பதே. அருந்ததியர் சமுதாய மக்களைக் குறைந்தபட்ச அளவில் இட ஒதுக்கீடு என்ற நாடகத்தை நடத்திய திமுக, ஜெயலலிதா இட ஒதுக்கீட்டை எதிர்த்ததாக ஒரு கபட நாடகத்தை நடத்துகிறது.

உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து வந்தபோது 2020-ஆம் ஆண்டு 20 பேர் கொண்ட வல்லுநர் கமிட்டி ஒன்றை அமைத்துச் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து வாதாடி தற்போது 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு வழிவகுத்து இந்தத் தீர்ப்பு வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது அதிமுக அரசுதான். இதையெல்லாம் மறைத்து திமுக ஆடும் கபட நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

போலி சமூக நீதி பேசும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாதி வெறியர்கள் வெறியாட்டம், தமிழ் நாடு முழுவதும் கொல்லப்பட்ட அருந்ததியர் சமுதாய இளைஞர்கள் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட, கலவரம் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் பட்டியலின மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கலவரங்கள் ஆகியவை குறித்து திமுக தலைமையிலான தமிழ் நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் உண்மையான சமூக நீதி உருவாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்