சென்னை: "தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது" என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.6) தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த மார்ச் மாதம் என்னைச் சந்தித்த மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் துறை சார்ந்த 16 அறிக்கைகளை அளித்தார். தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த அறிக்கையைதான், எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்டாக நான் நினைக்கிறேன்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாக மாணவர்கள் மட்டுமல்ல, கல்வித் துறையில் அடைந்துள்ள வளர்ச்சி என்ன?. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற சுகாதாரம் எந்தளவுக்கு மேன்மை அடைந்துள்ளது?. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு கூடிவருவதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? என்பது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.
» “தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது” - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்
» “வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியது பெருங்கொடுமை” - சீமான் சாடல்
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம்தான் திமுக. மாநிலத்தின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும்.
ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் என்று நான் அப்போது குறிப்பிட்டேன். இதே அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன. மாநில திட்டக்குழுவின் மூலமாக நான் எதிர்பார்ப்பது, புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்தளவுக்கு சிறப்பானவை என்பதை இந்த அறிக்கைகள் சொல்கிறது. அதனை இன்னும் சிறப்பானதாக நடத்துவதற்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்கள். மேலும், ஆலோசனை சொல்வதோடு உங்கள் கடமை முடிந்துவிடவில்லை. நீங்கள் வழங்கிய ஆலோசனைகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணியுங்கள். ஆலோசனைகளைச் செயல்படுத்துவதற்கு ஏதாவது தடை, தடங்கல்கள் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள்.
கடந்த முறை என்னிடம் தரப்பட்ட அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அது செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள். வேளாண்மை, காடுகள், வெப்பம் அதிகரிப்பு ஆகியவைக் குறித்த உங்களது ஆலோசனைகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக எந்தளவு மாறி உள்ளது என்பதையும் ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாநிலத் திட்டக் குழுவை இந்தியாவிலேயே முதன்முதலாக அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மத்திய அரசில் இருப்பதைப் போல மாநிலத்துக்கும் இருக்க வேண்டும் என்று நினைத்ததற்குக் காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாகத் தமிழக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அமைத்தார்.
• பசி இல்லை;
• பஞ்சம் இல்லை;
• வறுமை இல்லை;
• கொடுமையான தொற்று நோய் இல்லை;
• சாலைகள் இல்லாத கிராமங்கள் இல்லை;
• மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை;
• குடிதண்ணீர் இல்லாத கிராமம் இல்லை;
• பள்ளிகள் இல்லாத கிராமம் இல்லை;
இப்படி தன்னிறைவு பெற்றவையாக அனைத்து மாவட்டங்களையும் உருவாக்கினோம். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கி வருகிறோம். கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது.
அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். காலதாமதமின்றி அனைத்துப் பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும்." என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago