“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது” - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அவர், “தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்தையும், வலைகளை அறுப்பதையும், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதையும் தங்கள் பொழுதுபோக்காக இலங்கைக் கடற்படை செய்து வருகிறது. கடந்த 45 வருடங்களில் 875 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், கடற்படை ஆணையினைச் செயல்படுத்தும் இலங்கை மீனவர்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதேபோல 2014-ஆம் வருடம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்தப் போட்டி நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்திய மீனவர்களைப் பார்த்து, கிரிக்கெட்டில் இம்முறை நாங்கள் தோற்றால் உங்களை எல்லாம் கடலிலேயே வெட்டி தலை வேறு, முண்டம் வேறு என்று ஆக்கிவிடுவோம் என மிரட்டினர். அம்முறை இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றுவிட்டது. அன்றைய நாளிலேயே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை கொடூரமாக இலங்கைக் கடற்படை கொலை செய்தது. தலை வேறு, முண்டம் வேறாக நான்கு தமிழர்களின் உடல்களும் கடலில் மிதந்தன.

இப்பொழுது, பத்து நாட்களுக்கு முன்பே இலங்கைக் கடற்படையினர் நமது கடல் ஆதிக்கம் உள்ள இடத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நமது மீனவர்களைப் பார்த்து, படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தலையை தனியாக வெட்டியும் கோர கொலையைச் செய்தார்கள். இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய தமிழக மீனவர்களில் 850 மேற்பட்டவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தது.

தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டனர். ஒரு மீனவரைக் கொன்றுவிட்டனர். ஒருவர் காணாமலேயே போய்விட்டார். உடலும் கிடைக்கவில்லை. மற்ற இரண்டு மீனவர்களையும் கொன்று அவர்களின் உடல்களைத் துண்டு துண்டாக்கி கடலில் மிதக்க விட்டார்கள். இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.

நேற்றைக்கு முந்தைய நாள், நான்கு மீனவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். ஒரு மீனவரைக் கொன்றுவிட்டார்கள். தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை ஓரவஞ்சகமாக அடிமைப்படுத்தியும், பலத்த காயங்களை ஏற்படுத்தியதற்கு இலங்கை படைகளும், இலங்கை அரசும் பொறுப்பேற்க வேண்டும். நான் இரண்டு முறை பிரதமரைச் சந்தித்து, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையைச் சுட்டிக் காட்டினேன்.

வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் துயர நிலையை எடுத்துக் கூறி, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ்சிங் தலைமை தாங்கும் நாற்காலியில் வந்து அமர்ந்தார். சீக்கிரம் முடியுங்கள்; சீக்கிரம் முடியுங்கள் என்று மணியை அடித்துக்கொண்டே இருந்தார்.

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து இந்த மோடி அரசு பாதகம் செய்கிறது. இந்த நிலைமை தொடர்ந்துகொண்டே இருந்தால், தமிழக மீனவர்களின் இளம் தலைமுறையினரிடம் இந்தியா மீது வெறுப்புத்தான் உருவாகும். காலம் மாறும். தமிழக மீனவர்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் காலம் வரும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்