“அண்ணாமலை விவரமே இல்லாதவர்!” - அமைச்சர் துரைமுருகன் சாடல்

By வ.செந்தில்குமார்

வேலூர்: “அண்ணாமலை விவரம் புரிந்தவர் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விவரமே இல்லாதவர் என தெரிகிறது” என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 நகர பேருந்துகள் மற்றும் 17 புறநகர பேருந்துகள் என மொத்தம் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் 22 புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் சேர்க்காடு கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 2 வழிதடப் பேருந்துகள் நீட்டிப்பு சேவை இன்று (ஆக.5) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் பேசும்போது, ''வேலூர் மாவட்டத்தில் 22 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அரசு பேருந்துகளை இயக்குவதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் செல்வது போன்ற உணர்வினை அடைகின்றனர். ஒரு காலத்தில் பேருந்துகள் என்பது தனியார் வசம் இருந்தது. தனியார் பேருந்துகளில் முதலாளிகள் வைப்பதே சட்டமாக இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது இந்த துறை செம்மைப்படுத்தப்பட்டது.

போக்குவரத்துத் துறையில் மிகப் பெரும் புரட்சியை உருவாக்கியவர் கருணாநிதி. அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கருணாநிதி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோதுதான் ஒவ்வொரு பேருந்திலும் வள்ளுவர் படமும், திருக்குறளும் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். பயண நேரத்தில் பொதுமக்கள் அந்த திருக்குறளை படித்து அதன்படி செயல்படுவார்கள் என்ற எண்ணத்தோடு அதை அவர் செயல்படுத்தினார். அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய பணியை வேலையாக கருதாமல் சேவையாக செய்ய வேண்டும்.

ஒரு சில வழித்தடங்களில் பேருந்துகளில் பொதுமக்கள் இல்லை, கூட்டம் இல்லை என்ற காரணத்திற்காக பாதியிலேயே நிறுத்தி இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து காட்பாடி டெல் தொழிற்சாலை வரை இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது வள்ளிமலை கூட்டுச்சாலை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு உரிய வழித்தடத்தில் இயக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த கிராமத்தில் இருந்து பேருந்து புறப்படுகிறது என்று அறிவிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் இருந்து பொதுமக்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் அங்கிருந்துதான் புறப்பட வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்'' என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ''வேலூர் புதிய பேருந்துநிலையம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஏடிஎம் மையம், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட வசதிகள் இல்லாதது மற்றும் கடைகள் அப்படியே இருப்பது குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்.

வயநாடு பேரிடர் இதயம் உள்ளவர்களை எல்லாம் உருகவைத்து, அழவைத்த துயர சம்பவம். அதைக்கூட நாங்கள் பேரிடராக அறிவிக்க மாட்டேன் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அவர்களிடத்தில் இருப்பது இதயமா? கல்லா என்று தெரியாது. மேகேதாட்டு பிரச்சினையில் அண்ணாமலை கூறிய கருத்துக்குப் பிறகு நான் அவரை விவரம் புரிந்தவர் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். அத்தனை பேரை சமாளிக்கிறார் என்று அவரைப் பற்றி பலரிடம் கூறி இருக்கிறேன். ஆனால், அவர் விவரமே இல்லாதவர் என தெரிகிறது'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் சுனில்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்