மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ‘ரிவர் கிராசிங்’ குடிநீர் குழாய் பதிப்பு பணி விரைவில் தொடக்கம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ள நிலையில், பை-பாஸ் சாலையில் வைகை ஆற்றை கடந்து ‘ரிவர் கிராசிங்’ குடிநீர் குழாய் பதிப்பது மட்டும் எஞ்சியுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, கடந்த அதிமுக ஆட்சியில் அம்ருத் திட்டத்தில் ரூ.1295.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பன்னைப்பட்டியில் சுத்திகரித்து, மதுரை மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்பட்டு வெள்ளோட்டம் வெற்றிகரமாக பார்க்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த திட்டத்தில் பன்னைப்பட்டியில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்படும் குடிநீர், மெகா குழாய் வழியாக மதுரை - பைபாஸ் சாலையில் வைகை ஆற்றை கடந்து (River crassing) இன்னும் கொண்டு செல்லப்படவில்லை. அதற்கான தனிக் குழாய்கள் பதிக்கப்படவில்லை. ஆனால், ஏற்கெனவே வைகை கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் வைகை ஆற்றை கடந்து செல்லவதால் அந்த குழாய்கள் வழியாகவே தற்போது பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.

பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான மெகா குடிநீர் குழாய் இன்னும் வைகை ஆற்றை கடந்து பதிக்கப்படவில்லை. இந்தக் குழாய் வைகை ஆற்றின் வடக்கில் இருந்து தெற்காக பதிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், முதல்வர் நேரடியாக மதுரைக்கு வந்து இந்த குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதால், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளுடன் மேயர் இந்திராணி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE