கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கரூர் வழக்கறிஞர் புகார்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 5) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் கூறியது: “சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த அவதூறான பாடலை பாடியதற்காக கடந்த ஜூலை 11 தேதி அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை நான் பாடுகிறேன். என்னை கைது செய்து பாருங்கள் என முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுப்படுத்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரை தீய சக்தி என்றும் பல்வேறு வகையில் தமிழகத்துக்கு கெடுதல் செய்தவர் என பொய்க்கூறி செய்தியாளர்கள் முன் பாடல் பாடிய அவர் தன்னை கைது செய்து பாருங்கள் என சவால் விட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பேசியுள்ளார். அவரது பேச்சு இணையதளத்தில் உள்ளது. அதனை பார்ப்பவர்களுக்கு அது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மதிப்பும், மரியாதையும் கொண்ட எனக்கு இச்செயல் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அவருக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர், எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்காவிடில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE