நெல்லை மேயர் தேர்தல்: திமுக வேட்பாளருக்கு போட்டியாக கவுன்சிலர் வேட்புமனு தாக்கல்

By அ.அருள்தாசன்

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு போட்டியாக கவுன்சிலர் பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு திமுக கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கிட்டு என்ற ராமகிருஷ்ணன் சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வந்திருந்தனர். தேர்தலை ஒட்டி மாநகராட்சி வளாகம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தேர்தலில் திமுக சார்பில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு போட்டியாக திமுகவிலிருந்து சமீபத்தில் விளக்கப்பட்ட கவுன்சிலரும், ஆறாவது வார்டு உறுப்பினருமான பவுல்ராஜ் மனுதாக்கல் செய்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாலாவது வார்டு உறுப்பினர் வசந்தா, திமுக உறுப்பினரும், 41 வது வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் சங்கீதா ஆகியோர் போட்டி வேட்பாளர் பவுல்ராஜை ஆதரித்து முன்மொழிந்துள்ளனர். இதனால் நெல்லை மேயர் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE