தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் இன்று டெல்லி செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓரிரு மாதங்களில் வெளிநாடு செல்ல உள்ளார். இங்கிலாந்தில் சில மாதங்கள் தங்கி இருந்து அரசியல் தொடர்பான படிப்பு மேற்கொள்ள உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து இங்கிலாந்து பயணம், தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும், இலங்கை கடற்படையின் கப்பல் மோதி மலைச்சாமி என்ற ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். மேலும் புதுக்கோட்டைடை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உடனடியாக மீனவர் பிரச்சினைக்காக தீர்வு காண மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மனு அளிக்க இன்று தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். அவருடன் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் செல்கின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மீனவர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து அண்ணாமலை பேச இருப்பதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE