அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கலைஞர் மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய நிதியின்கீழ் ரூ.5.89 கோடியில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளுக்கும் சேர்த்து குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உடனிருப்போர் தங்கும் விடுதி மற்றும் உணவு தயாரிக்கும் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டுமானப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரெமா சந்திரமோகன், அரசு தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநர் குப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

7-ம் தேதி திறந்துவைப்பு: இந்த கட்டிடம் படுக்கை வசதியுடன் கூடிய 4 தளங்களாக கட்டப்படுகிறது. சமையலறை, கழிப்பறை, குளியலறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. தரைதளத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிட உணவருந்தும் கூடமும் கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் இரு மருத்துவமனைகளுக்கும் பெரிய அளவில் பயன்படும்.

சென்னை அரசு கஸ்தூரிபாய் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் ரூ.6.17 கோடியில் கட்டிடத்தின் பணிகள் முடிவுற்றுள்ளன. வரும் 7-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

புற்றுநோய் சிகிச்சை மையம்: சிஎஸ்ஆர் நிதியின் கீழ் இன்போசிஸ் நிறுவனம் ரூ.30 கோடியிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கலைஞர் பெயரால் நடத்தப்பட்ட மாரத்தான் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.

அந்த மாரத்தான் மூலம் கிடைக்கப்பெற்ற பதிவுத்தொகை ரூ.3.42 கோடி மற்றும் அரசு நிதி ஒதுக்கீடு ரூ.6.85 கோடி என மொத்தம் ரூ.10.27 கோடியில் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான கட்டிடம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்படவுள்ளது. அதற்கான தொடக்கப் பணிகளையும், மருத்துவமனையில் ரூ.35 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 7-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE